×

சவுதி அரேபியாவுக்கு சென்று மாயமானவரை மீட்க வேண்டும்: வெளிநாடுவாழ் தமிழர்கள் நலச்சங்கம் அமைச்சரிடம் மனு

சென்னை: சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்று காணாமல் போனவரை மீட்க வேண்டும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தானை நேரில் சந்தித்து வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்க தலைவர் அ.அப்துல் வாஹித், நிஜாமுத்தீன் ஆகியோர் வெளிநாடு வாழ் தமிழர் நலன் மற்றும் சிறுபான்மை துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தானை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஏ.புத்தூரை அருண் (எ) அருணாச்சலம் சவுதி அரேபியா ரியாத்தில் வீட்டு வாகன ஓட்டுநர் பணிக்காக கடந்த 2017ம் ஆண்டு சென்றார்.

இந்நிலையில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்து வருகிறார். சவுதி அரேபியாவில் ஜிசான் அல்லது நஜ்ரான் இந்த இரண்டு இடங்களில் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர் எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என்று தெரியாமல் குடும்பத்தார் தவித்து வருகின்றனர்.எனவே தமிழ்நாடு அரசின் மூலமாக, இந்திய தூதரகத்தின் வாயிலாகவும் கண்டறிந்து அவரை குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இவர்களின் கோரிக்கையை கேட்டறிந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடனடியாக துறை சார்ந்த அதிகாரிகளை அழைத்து தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

The post சவுதி அரேபியாவுக்கு சென்று மாயமானவரை மீட்க வேண்டும்: வெளிநாடுவாழ் தமிழர்கள் நலச்சங்கம் அமைச்சரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Saudi Arabia ,Expatriate Tamils Welfare Association ,Chennai ,Senji Mastan ,
× RELATED சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் அட்மிட்