×

மன்கட் – பூரன் அதிரடியில் லக்னோ அபார வெற்றி

ஐதராபாத்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் (பகல்/இரவு), டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பேட் செய்தது. அன்மோல்பிரீத் சிங், அபிஷேக் ஷர்மா இணைந்து ஐதராபாத் இன்னிங்சை தொடங்கினர். அபிஷேக் 7 ரன் எடுத்து யுத்வீர் சிங் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டி காக் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 13 ரன்னில் வெளியேற, அன்மோல்பிரீத் 36 ரன் (27 பந்து, 7 பவுண்டரி) விளாசி அமித் மிஷ்ரா சுழலில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் எய்டன் மார்க்ரம் 28 ரன் விளாசி (20 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) க்ருணால் பாண்டியா பந்துவீச்சில் டி காக் வசம் பிடிபட்டார். கிளென் பிலிப்ஸ் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேற, ஐதராபாத் 115 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், ஹெய்ன்ரிச் கிளாஸன் – அப்துல் சமத் ஜோடி அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது.

இருவரும் 6வது விக்கெட்டுக்கு 58 ரன் சேர்த்தனர். கிளாஸன் 47 ரன் (29 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஆவேஷ் கான் பந்துவீச்சில் மன்கட் வசம் பிடிபட்டார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது. அப்துல் சமத் 37 ரன் (25 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்), புவனேஷ்வர் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். லக்னோ பந்துவீச்சில் க்ருணால் 2, யுத்வீர், ஆவேஷ், யஷ் தாகூர், அமித் மிஷ்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 183 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் களமிறங்கியது. கைல் மேயர்ஸ், டி காக் இருவரும் துரத்தலை தொடங்கினர். மேயர்ஸ் 2 ரன் மட்டுமே எடுத்து பிலிப்ஸ் பந்துவீச்சில் மார்க்ரம் வசம் பிடிபட, லக்னோவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. டி காக் 29 ரன் (19 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி மார்கண்டே சுழலில் அபிஷேக் வசம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

லக்னோ அணி 8.2 ஓவரில் 54 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், பிரேரக் மன்கட் – மார்கஸ் ஸ்டாய்னிஸ் இணைந்து 3வது விக்கெட்டுக்கு அதிரடியாக 73 ரன் சேர்த்து ஆட்டத்தின் போக்கை அடியோடு மாற்றினர். குறிப்பாக, அபிஷேக் ஷர்மா வீசிய 16வது ஓவரில் 5 சிக்சர்கள் உள்பட 31 ரன் விடுக்கொடுத்தது ஐதராபாத் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. ஸ்டாய்னிஸ் அவுட்டானதும் உள்ளே வந்த பூரன் ஹாட்ரிக் சிக்சர் விளாசி மிரட்டினார்.
லக்னோ அணி 19.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. பிரேரக் மன்கட் 64 ரன் (45 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), நிகோலஸ் பூரன் 44 ரன்னுடன் (13 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐதராபாத் பந்துவீச்சில் பிலிப்ஸ், மார்கண்டே, அபிஷேக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மன்கட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். லக்னோ அணி 12 போட்டியில் 6வது வெற்றியை பதிவு செய்து 13 புள்ளிகளுடன் மீண்டும் 4வது இடத்துக்கு முன்னேறியது.

The post மன்கட் – பூரன் அதிரடியில் லக்னோ அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : Lucknow ,Mankat ,Pooran ,Hyderabad ,IPL league ,Sunrisers Hyderabad ,Lucknow Super Giants ,
× RELATED டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி