×

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பா.ஜவால் செல்லாக்காசான அதிமுக, தமிழர்கள் ஒட்டுமொத்தமாக காங்கிரசுக்கு ஓட்டு

கர்நாடகா: கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாஜ அணியில் அதிமுக இருப்பதால் தமிழர்களின் ஓட்டு ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் பக்கம் விழுந்துள்ளது. கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. ஆளும் பா.ஜ படுதோல்வி அடைந்து உள்ளது. கர்நாடகாவில் 25 முதல் 30 தொகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கிறார்கள். அதனால்தான் கர்நாடகாவில் எப்போது தேர்தல் நடந்தாலும் அதிமுக சார்பில் அங்கு வேட்பாளர்களை நிறுத்துவது வாடிக்கையாக உள்ளது. எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்தபோது, கர்நாடகாவில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்ற சம்பவமும் நடந்துள்ளது.

இந்த நிலையில்தான் தற்போது நடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தமிழர் பகுதியில் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தினார்கள். தற்போது, தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜ கூட்டணியில் இருப்பதால், டெல்லி பாஜ தலைவர்களுக்கு இது எரிச்சலை ஏற்படுத்தியது. இதுபற்றி தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை டெல்லி மேலிடத்தில் புகார் செய்தார். இதையடுத்து அமித்ஷாவின் கோரிக்கையை ஏற்று எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோர் தங்களது வேட்பாளர்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

அதிமுக வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி வாபஸ் வாங்கிக் கொண்டாலும், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் என்று பகிரங்கமாக கூறவில்லை. அதேபோன்று எடப்பாடி பழனிசாமியும் கர்நாடகாவுக்கு சென்று பாஜ கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் பிரசாரம் செய்யவில்லை. இந்த நிலையில்தான் நேற்று தேர்தல் முடிவு வெளியாகி உள்ளது. இதில் பாஜ தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. பா.ஜ அணியில் அதிமுக இருப்பதால் வழக்கமாக அதிமுக இருக்கும் அணிக்கு வாக்களிக்கும் தமிழர்கள் இந்தமுறை பா.ஜவை புறக்கணித்து ஒட்டுமொத்த காங்கிரசுக்கு ஓட்டு போட்டனர்.

இதனால் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தாலோ அல்லது பாஜ வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்திருந்தாலோ அங்கு பா.ஜவுக்கு கூடுதல் ஓட்டு கிடைத்திருக்கலாம். ஆனால் அதை செய்யாததால் அதிமுக தலைவர்கள் மீது அமித்ஷாவும் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

The post கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பா.ஜவால் செல்லாக்காசான அதிமுக, தமிழர்கள் ஒட்டுமொத்தமாக காங்கிரசுக்கு ஓட்டு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,Karnataka assembly elections ,Congress ,Karnataka ,ADMK ,Tamils ,
× RELATED வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்:...