×

வெம்பக்கோட்டை அருகே அகழாய்வு தொல்பொருட்கள் கண்காட்சி; அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

ஏழாயிரம்பண்ணை: வெம்பக்கோட்டை அருகே, தொல்பொருட்கள் கண்காட்சியை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வைப்பாற்றின் வடக்கு கரையோரம் அமைந்துள்ள வெம்பக்கோட்டை அடுத்த, விஜயகரிசல்குளத்தில் 25 ஏக்கரில் உள்ள தொல்லியல் மேட்டில் நுண்கற்கருவிகள், சங்ககால மண்பாண்ட ஓடுகள், பெருங்கற்கால பண்பாட்டு எச்சங்கள் மற்றும் செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டன. இவை கிமு 4,000 முதல் கிமு 3,000 ஆண்டு பழமையானதாக இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வெம்பக்கோட்டையில் முதற்கட்ட அகழாய்விற்காக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டது. அகழாய்வு பணி கடந்த ஆண்டு மார்ச் 16ல் தொடங்கியது. இதில் நுண்கற்காலம் முதல் இடைகற்காலம் வரை இப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் கிடைத்தன. மேலும், சுடுமண் பகடைக்காய், ஆட்டக்காய்கள், முத்துமணிகள் உள்ளிட்ட 3,254 வகை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன. முதற்கட்ட அகழாய்வு கடந்த செப்.30ல் நிறைவு பெற்றது.

கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பார்வையிடுவதற்காக, விஜயகரிசல்குளம் உச்சிமேடு அருகே தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று திறந்து வைத்தனர்.

The post வெம்பக்கோட்டை அருகே அகழாய்வு தொல்பொருட்கள் கண்காட்சி; அமைச்சர்கள் திறந்து வைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Exhibition of Excavated Artifacts ,Vembakkottai ,Ejayarampannai ,Ministers ,Thangam Tennarasu ,Chatur Ramachandran ,Virudhunagar District ,Chatur… ,Excavated Artifacts Exhibition ,Vembakottai ,
× RELATED ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை...