×

‘பர்ஹானா’ இஸ்லாமியர்களுக்கு எதிரான படமல்ல; தயாரிப்பாளர் விளக்கம்

சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ் நடித்துள்ள படம் ‘பர்ஹானா. இதை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. நெல்சன் வெங்கடேசன் இயக்கி உள்ளார். ஒரு முஸ்லிம் பெண் குடும்பத்தின் வறுமையை போக்க கால் செண்டருக்கு வேலைக்கு செல்வது ேபான்று கதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். படம் நேற்று முன்தினம் சுமார் 500 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. ஒரு சில தியேட்டர்களில் படத்தை திரையிட சிலர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து படம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குனர் நெல்சன் வெங்கடேசன், எழுத்தாளர் மனுஷ்ய புத்ரன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: பர்ஹானா இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் அல்ல, இஸ்லாமியர்களுக்கான படம். படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள், மீடியாக்கள் பாராட்டி வருகிறது.

ஆனால் படத்தை பார்க்காத ஒரு சிலர் இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் போன்று சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். இதனால் ஆங்காங்கே சில பிரச்னைகள் உருவானது. ஆரம்பத்தில் இந்த படம் பிரச்னைக்குரிய படமாக இருக்கும் என்று கருதி தமிழக அரசு படத்திற்கும், தயாரிப்பாளர், இயக்குனர், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கியது. படம் வெளிவந்த பிறகு படத்தில் பிரச்னைக்குரிய அம்சங்கள் எதுவும் இல்லை என்பதை அறிந்து பாதுகாப்பை வாபஸ் பெற்றுக் கொண்டது. படம் பல இஸ்லாமிய நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது. அங்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

ஒரு நாட்டை தவிர மற்ற நாடுகள் தணிக்கை சான்று வழங்கி உள்ளது. பர்ஹானா படம் எந்த மதத்திற்கும், உணர்வுகளுக்கும் எதிரானது அல்ல. நல்லதிரைப்படங்களை வழங்கவேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கமே தவிர, ஒருநாளும் எந்த மதஉணர்வுகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் எதிராகவோ, புண்படுத்தும் விதமாகவோ செயல்படுவது அல்ல.மேலும் மனித குலத்திற்கு எதிரான ஓரு செயலை என்றும் எங்கள் கதைகளில் நாங்கள் அனுமதிப்பதில்லை, விரும்புவதுமில்லை. இதை எங்களின் ஃபர்ஹானா திரைப்படம் குறித்துஅறியாமல் சர்ச்சைகளை உருவாக்கி வரும் சகோதர, சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினாார்கள்.

The post ‘பர்ஹானா’ இஸ்லாமியர்களுக்கு எதிரான படமல்ல; தயாரிப்பாளர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Aishwarya Rajesh ,Jitan Ramesh ,Dream Warrior Pictures ,Nelson Venkatesan… ,
× RELATED கன்னடத்தில் அறிமுகம் ஆகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்