×

தமிழ்நாடு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷம்பு கல்லோலிகர் 2ம் இடம் பிடித்தார்

சென்னை: தமிழ்நாடு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷம்பு கல்லோலிகர், ரெய்பேக் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு 2ம் இடம் பிடித்தார். வெற்றி பெற்ற பாஜ வேட்பாளரை விட ஒரு சதவீத வாக்கு தான் அவர் குறைவாக பெற்றுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரான ஷம்பு கல்லோலிகர் பதவியில் இருந்து சமீபத்தில் ராஜினாமா செய்தார். தமிழ்நாட்டில் இவர் இணை தலைமை செயலாளர் என்ற கிரேடில் இருந்தார். 1991ம் ஆண்டில் ஐஏஎஸ் ஆகி தமிழ்நாடு பேட்ச் அதிகாரி ஆனார். கடைசியாக சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை செயலாளர் பொறுப்பில் அவர் பணியாற்றினார். இந்நிலையில் விருப்ப ஓய்வு பெற்ற அவர் தனது சொந்த மாநிலமான கர்நாடகாவிற்கு சென்றார். அங்கு காங்கிரஸ் கட்சியில் இவர் இணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியது.

இதனால் அவர் பெலகாம் தொகுதி வேட்பாளராக களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இந்நிலையில், பெல்காமின் ரெய்பேக் தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கினார். விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் சுயேட்சையாக களம் இறங்கியதால் அந்த தொகுதி பெரிய அளவில் பேசப்பட்டது. அந்த தொகுதிக்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவேன் என்ற வாக்குறுதியுடன் களம் இறங்கிய அவர் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்நிலையில், கர்நாடக தேர்தல் முடிந்து நேற்று வாக்குகள் எண்ணப்பட்டது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுயேட்சை வேட்பாளரான ஷம்பு கல்லோலிகர், 54,533 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். இந்த தொகுதியில் பாஜ வேட்பாளர் தோல் துர்யோதன் மகாலிங்கப்பா 57,164 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். ஆனாலும், ஷம்பு கல்லோலிகர் வெறும் 2631 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 33.23 சதவீத வாக்குகள் பெற்ற ஷம்பு கல்லோலிக்கர் பாஜ வேட்பாளரை விட ஒரு சதவீத வாக்குகள் மட்டுமே குறைவு. எந்த அரசியல் கட்சி ஆதரவு இல்லாமல் ஒரு ஐஏஎஸ் அதிகாரி தனித்து போட்டியிட்டு இவ்வளவு வாக்குகள் பெற்றிருப்பது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இவர் தமிழ்நாட்டை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அமுதாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தமிழ்நாடு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷம்பு கல்லோலிகர் 2ம் இடம் பிடித்தார் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Shambu Kallolikar ,Chennai ,Raybag ,Tamilnadu ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...