×

பரந்தூர் விமான நிலையம் லூயில் பெர்கர் நிறுவனம் அறிக்கை தயாரிக்க நியமனம்: ரூ.20 ஆயிரம் கோடியில் செயல்படுத்த ஒப்பந்தம்

சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பான, தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ரீதியிலான விரிவான அறிக்கை தயாரிக்க லூயிஸ் பெர்கர் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு அடுத்தபடியாக சென்னை அருகே, 2வது விமான நிலையம் அமைக்க பரந்தூர் தேர்வானது. அதை ரூ.20 ஆயிரம் கோடி செலவில் 4,700 ஏக்கர் பரப்பில் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. எனினும் அப்பகுதியில் உள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த நிலங்களுக்கு உரிய மதிப்பு, நிலம் வழங்குவோரின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு, குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு நிலத்தை கையகப்படுத்தும் பணிக்கு ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை மேற்கொள்வதற்காக காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு அலுவலகம் திறக்கப்பட்டு அரசு நிலம் துறை மாற்றம், நில எடுப்புக்கான அடிப்படை கோப்புகளை தயாரித்தல் ஆகிய பணிகள் நடந்துவருகின்றன.

திட்டத்தை செயல்படுத்த டிட்கோ நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது. இதற்கு தொழில்நுட்ப பொருளாதார ரீதியிலான விரிவான அறிக்கை அவசியம். அதன் அடிப்படையில் பரந்தூர் விமான நிலையத்துக்கு தேவையான அனுமதிகளை பெற உதவி செய்யவும், விமான நிலையத்தின் திட்டமிட்ட வளர்ச்சிக்கு ஒப்பந்தப் பணிகளை மேலாண்மை செய்ய உதவி செய்யும் வகையிலும் விரிவான தொழில்நட்ப பொருளாதார அறிக்கையை தயாரித்து அளிக்க ஆலோசகரை தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளது.

ஆலோசகராக பல்வேறு நிறுவனங்கள் தங்கள் பணிகள், அனுபவங்கள் உள்ளிட்ட விபரங்களை டிட்கோவிடம் சமர்ப்பித்தனர். இந்த பணிகளை செய்வதற்கு லூயிஸ் பெர்கர் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. லூயிஸ் பெர்கர் கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட் எனும் இந்த சர்வதேச ஆலோசனை நிறுவனம் தொழில்நுட்ப, நிதி மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து இந்த புதிய விமான நிலைய திட்டத்திற்கான அறிக்கையை அளிக்கும். அதன் பிறகு விமான நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கும்.

The post பரந்தூர் விமான நிலையம் லூயில் பெர்கர் நிறுவனம் அறிக்கை தயாரிக்க நியமனம்: ரூ.20 ஆயிரம் கோடியில் செயல்படுத்த ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : Paranthur Airport ,Leuille Berger ,Chennai ,Louis Berger ,Dinakaran ,
× RELATED பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு...