×

பாஜகவை வீழ்த்தி தனிப்பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் காங். ஆட்சியை கைப்பற்றியது: சித்தராமையா முதல்வராக தேர்வு?

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையாக 125 இடங்களைப் பிடித்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. மேலும் பாஜக அமைச்சர்கள் 8 பேர் தோல்வியை சந்தித்துள்ளனர். கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜக, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவியது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இத்தேர்தலில் 73.29 சதவீத வாக்குகள் பதிவாகின. இத்தேர்தலில் ஆளும் பாஜக 224 தொகுதிகளிலும், எதிர்க்கட்சியான‌ காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாய சங்கம்), மதச்சார்பற்ற ஜனதா தளம் 207, ஆம் ஆத்மி 217, பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளிலும் போட்டியிட்டன. 918 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 2,613 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
இந்நிலையில் கர்நாடக பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மாநிலம் முழுவதும் 34 மாவட்டங்களில் உள்ள 36 மையங்களில் இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் எண்ணப்பட்டு வருகின்றன. மதியம் 12 மணி நிலவரப்படி காங்கிரஸ் – 125, பாஜக – 70, மஜத – 22, பிற கட்சிகள்- 7 இடங்களில் முன்னிலையில் இருந்தது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 113 இடங்களில் வெற்றிப் பெற வேண்டும் என்ற நிலையில், காங்கிரஸ் தொடர்ந்து பெரும்பான்மை பலத்தையும் தாண்டி முன்னிலை வகித்தது. கடந்த 10ம் தேதி நடந்த வாக்குப்பதிவுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறியபடியே, தேர்தல் முடிவுகள் குறித்த முன்னணி நிலவரங்கள் இருந்தன. அதாவது தேர்தலுக்கு பிந்தைய 10 கருத்துக் கணிப்பில் 7 கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ்ஆட்சியை கைப்பற்றும் என்று கூறியிருந்தன. அதன்படியே முன்னணி நிலவரங்களும் அமைந்தன. பாஜகவில் சீட் மறுக்கப்பட்டதால் காங்கிரசில் இணைந்து ஹூப்ளி-தர்வாட் மத்திய சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட ஜெகதீஷ் ஷெட்டர் காலை 9 மணி முதலே பின்தங்கிய நிலையில் இருந்தார். சிக்கமகளூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக செயலாளர் சி.டி.ரவி பின்னடைவில் இருந்தார்.

மதசார்பற்ற ஜனதா தளம் தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி, ஆரம்பத்தில் பின்னடைவை சந்தித்த நிலையில் பின்னர் முன்னிலை வகித்தார். மேலும், பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை (ஷிகாவ்ன் தொகுதி). காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா (வருணா தொகுதி), கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் (கனகபுரா தொகுதி), முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனான பி.ஒய்.விஜயேந்திரா (ஷிகாரிபுரா தொகுதி), காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே (சித்தப்பூர் தொகுதி), முன்னாள் பிரதமர் எச்.டி.தேவேகவுடாவின் பேரன் நிகில் குமாரசாமி (ராமநகரா தொகுதி) உள்ளிட்ட பிரபலங்கள் தொடர்ந்து முன்னிலை வகித்தனர். தொடர்ந்து காலை 10 மணிக்கு தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, காங்கிரஸ் 110 இடங்களிலும் பாஜக 71 இடங்களிலும், மஜத 23 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாக அறிவிக்கப்பட்டது. மாநில பாஜவில் தற்போது அமைச்சர்களாக இருக்கும் ஜே.சி.மாதுசாமி, சுதாகர், நாராயணகவுடா, கோவிந்தகார்ஜோள், எஸ்.டி.சோமசேகர், வி.சோமண்ணா, முருகேஷ் நிராணி, சி.சி.பாட்டீல், எம்.டி.பி.நாகராஜ், பி.சி.பாட்டீல், சாம்ராஜ்நகர் மற்றும் வருணா ஆகிய இரு தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் வி.சோமண்ணா ஆகியோர் பின்னிலையில் இருந்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எச்.கே.பாட்டீல், டாக்டர் பரமேஷ்வர், எம்.பி.பாட்டில், கே.எச்.முனியப்பா ஆகியோர் அதிகம் வாக்குகள் வித்யாசத்தில் முன்னிலையில் இருந்தனர்.

மதியம் 2 மணி நிலவரப்படி காங்கிரஸ் 130 இடங்களிலும், பாஜக 67 இடங்களிலும், மஜத 21 இடங்களிலும், மற்றவை 6 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன. முன்னிலை அடிப்படையில் பெரும்பான்மை பலத்தை (113 இடங்கள்) காங்கிரஸ் அடைந்ததால், பாஜக ஆட்சியை இழக்கிறது. டெல்லி, கர்நாடகா காங்கிரஸ் தலைமையகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் உற்சாகமாக பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடினர். முன்னிலை நிலவரத்தில் தொடர்ந்து பின்னடைவை பாஜக சந்தித்து வந்ததால், கர்நாடகா பாஜக அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள், அந்தந்த மாவட்ட தலைவர்களுடன் மாநில அலுவலகத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர்கள் பெங்களூருக்கு வருவதற்காக 17 ஹெலிகாப்டர்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் பாஜகவும், மஜதவும் இணைந்தால் கூட ஆட்சி அமைக்க முடியாதநிலை தற்போது உருவாகியுள்ளதால், பாஜக தோல்வியை ஒப்புக் கொண்டு எதிர்க்கட்சியாக தொடர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா கூறுகையில், ‘நிச்சயம் எனது தந்தை முதல்வர் ஆவார். அதனை பார்க்க விரும்புகிறேன்’ என்றார்.

The post பாஜகவை வீழ்த்தி தனிப்பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் காங். ஆட்சியை கைப்பற்றியது: சித்தராமையா முதல்வராக தேர்வு? appeared first on Dinakaran.

Tags : karnataka ,bajaka ,sidaramaiah ,Bangalore ,Congress Party ,Bhajaga ,Sundarumbanamanam ,
× RELATED வெறுப்பு பேச்சு விவகாரம்; மோடிக்கு...