×

வறண்டு கிடந்த நிலங்கள் பசுமையானது-க.பரமத்தி விவசாயிகள் மகிழ்ச்சி

க.பரமத்தி : க.பரமத்தி ஒன்றிய பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால், மேய்ச்சல் நிலங்களில் புற்கள் முளைத்து, பசுமையாகக் காட்சியளிக்கின்றன. இதனால் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.க.பரமத்தி ஒன்றியத்தில் 30 ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள குக்கிராமங்களில் கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யாததால் விவசாயிகள், விவசாயத்தைத் தவிர்த்து கால்நடை வளர்ப்பதை தொழிலாக செய்து வந்தனர். இருப்பினும் மழை இல்லாததால் மேய்ச்சல் நிலங்களில் புற்கள் முளைக்க வாய்ப்பின்றி போனது. இதனால் பசுந்தீவனங்களை அதிக விலை கொடுத்து வேறு பகுதிகளில் இருந்து வாங்கி வந்து கால்நடைகளை காப்பாற்றி வந்தனர்.

இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக முளைத்துள்ள இளம் புற்கள் புத்துயிர் பெற்றன. கம்பு, சோளம், புண்ணாக்கு, பருத்தி கொட்டை போன்றவை வெளி மார்க்கெட்டில் விலைக்கு வாங்கி வந்து அவற்றை கால்நடைகளுக்கு வழங்கி வந்தனர். இதனால் விவசாயிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர்.தற்போது பெய்து வரும் மழையால் இலை, தழைகள், புற்கள், கீரை வகைகள் அதிகமாக முளைத்துள்ளன. இது கால்நடை வளர்க்கும் விவசாயிகள் உள்ளிட்ட பொது மக்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கால்நடைகளை வளர்க்கும் விவசாயி கூறுகையில், க.பரமத்தி ஒன்றியப் பகுதியில் பெய்து வரும் மழையால் மேய்ச்சல் நிலங்களில் புற்கள், இலை, தழைகள் முளைக்கத் தொடங்கி பசுமையாக காட்சி அளிக்கிறது. இதனால் தீவனங்களுக்காக விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் செலவு செய்து அலைவது குறைந்திருக்கிறது. மேலும் இது ஆடு, மாடு வளர்ப்பவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது, என்றார்.

The post வறண்டு கிடந்த நிலங்கள் பசுமையானது-க.பரமத்தி விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : K. ,Union ,K. Paramathi ,
× RELATED கோடையை போல கொளுத்தும் வெயில் விதைக்கப்பட்ட சோளம் கருகும் அபாயம்