×

கர்நாடகா சட்டமன்ற பொதுத்தேர்தல்: பாஜகவை தோற்கடித்த அதிமுக.! தொண்டர்கள் குமுறல்

சென்னை: கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு கொடுக்காததால் தமிழர்கள் வசிக்கும் இடங்களில் பாஜக தோல்வி அடைந்ததாக தொண்டர்கள் விமர்சித்துள்ளனர். இதனால் அமித்ஷா கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டது. தொடக்கம் முதலே அங்கு காங்கிரஸ் முன்னிலை வகித்தது. இன்று மதியம் நிலவரப்படி 125 இடங்களுக்கு மேல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதால், காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. பாஜக 70க்கும் குறைவான இடங்கள் பெற்று பின்னடவை சந்தித்துள்ளது. கர்நாடகாவில் 25 முதல் 30 தொகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கிறார்கள். அதனால்தான் கர்நாடகாவில் எப்போது தேர்தல் நடந்தாலும் அதிமுக சார்பில் அங்கு வேட்பாளர்களை நிறுத்துவது வாடிக்கையாக உள்ளது.

எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்தபோது, கர்நாடகாவில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்ற சம்பவமும் நடந்துள்ளது. இந்த நிலையில்தான் தற்போது நடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தமிழர் பகுதியில் தனித்தனி வேட்பாளர்களை நிறுத்தினார்கள். தற்போது, தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜ கூட்டணியில் இருப்பதால், டெல்லி பாஜ தலைவர்களுக்கு இது எரிச்சலை ஏற்படுத்தியது. இதுபற்றி தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை டெல்லி மேலிடத்தில் புகார் செய்தார். இதையடுத்து அமித்ஷாவின் கோரிக்கையை ஏற்று எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோர் தங்களது வேட்பாளர்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர். அதிமுக வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி வாபஸ் வாங்கிக் கொண்டாலும், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் என்று பகிரங்கமாக கூறவில்லை.

அதேபோன்று எடப்பாடி பழனிசாமியும் கர்நாடகாவுக்கு சென்று பாஜ கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் பிரசாரம் செய்யவில்லை. இந்த நிலையில்தான் இன்று தேர்தல் முடிவு வெளியாகி உள்ளது. இதில் பாஜ தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தாலோ அல்லது பாஜ வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்திருந்தாலோ அங்குள்ள தமிழர்கள் பாஜவுக்கு வாக்களித்திருப்பார்கள். பாஜவும் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் என்று பாஜக தொண்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன்மூலம் கர்நாடகாவில் பாஜக தோல்விக்கு அதிமுகவும் ஒரு காரணம் என்று அவர்கள் பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகிறார்கள். இதனால் அதிமுக தலைவர்கள் மீது அமித்ஷாவும் கடும் அதிருப்தியில் இருப்பது தெரியவந்துள்ளது.

The post கர்நாடகா சட்டமன்ற பொதுத்தேர்தல்: பாஜகவை தோற்கடித்த அதிமுக.! தொண்டர்கள் குமுறல் appeared first on Dinakaran.

Tags : Karnataka Assembly General Election ,Kumal ,Chennai ,Rajya Sabha ,Tamils ,Bajagu ,Karnataka ,Bajaka ,Volunteers ,Kudal ,
× RELATED நரிக்குறவர்கள் செய்து தரும்...