×

வருசநாடு அருகே கிடப்பில் போடப்பட்ட தார்ச்சாலை பணி விரைவில் துவங்கப்படுமா?

*மலைக்கிராம மக்கள் பெரும் எதிர்பார்ப்பு

வருசநாடு : வருசநாடு முதல் தும்மக்குண்டு, வாலிப்பாறை வரை சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிலான தார்ச்சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.
பொதுமக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தார்சாலை அமைக்க அரசு உத்தரவிட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்தது. அதன் பின்னர் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

அப்போது சாலையில் குறிப்பிட்ட பகுதிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறி தார் சாலை அமைக்கும் பணிகளுக்கு வருசநாடு வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை தவிர்த்து மற்ற பகுதிகளில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்தது. மீதமுள்ள 5 கிலோமீட்டர் தொலைவிலான பகுதியில் சாலை அமைக்க வனத்துறையினர் தற்போது வரை அனுமதி வழங்கவில்லை. இதனால் அந்த பகுதியில் மட்டும் தார்ச்சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக காணப்படுகிறது.இந்த பகுதியில் மட்டும் நாள்தோறும் பைக், ஆட்டோ, ஜீப் உள்ளிட்ட வாகன விபத்துகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த விபத்துகளில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

அதேபோல சேதமடைந்த சாலையால் விவசாய விளைபொருட்களை தேனி, சின்னமனூர், கம்பம், ஆண்டிபட்டி உள்ளிட்ட சந்தைகளுக்கு உரிய நேரத்திற்கு எடுத்துச் செல்ல முடியவில்லை.
சாலை அதிக அளவில் சேதம் அடைந்ததை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராம பொதுமக்கள் சாலை பள்ளங்களில் மணலை கொட்டி தற்காலிகமாக சாலையை சீரமைத்தனர். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக வருசநாடு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக சாலை தற்போது சேறும் சகதியுமாக மாறிவிட்டது.

இதனால் பைக், ஆட்டோ உள்ளிட்ட சிறிய அளவிலான வாகனங்கள் சாலையில் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வனத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கிடப்பில் போடப்பட்டுள்ள தார்ச்சாலை பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வருசநாடு அருகே கிடப்பில் போடப்பட்ட தார்ச்சாலை பணி விரைவில் துவங்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : annuavanadu ,Annuanadu ,
× RELATED வருசநாடு அருகே மலைக்கிராமத்திற்கு...