×

கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி துவங்கியது

கூடலூர் : நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் கோடை விழாவின் ஒரு பகுதியாக கூடலூரில் 3 நாட்கள் நடைபெறும் வாசனை திரவிய கண்காட்சி நேற்று துவங்கியது. பள்ளி வளாக வாயிலில் தோட்டக்கலை துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த 24 அடி அகல 12 அடி உயர வாசனை திரவியங்களால் ஆன வரவேற்பு வளைவு பகுதியில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் அம்ரித் முன்னிலையில் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

அமைச்சர், அதிகாரிகள் ஆகியோருக்கு செண்டை மேளம் முழங்க படுக இன மக்களின் கலாசார நடனத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, சுற்றுலாத்துறை, வனத்துறை, கூடலூர் நெல்லியாளம் நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் தொண்டு நிறுவனங்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.

கூடலூர் ஆர்டிஓ முகமது குதுரத்துல்லா, கூடலூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி வரவேற்று பேசினார்.
தொடர்ந்து அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது: நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வளர்ச்சிக்காக 100 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கூடலூர் வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வரும் நிலையில் கூடலூரை சுற்றியுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தி உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான ஆய்வுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு தனியார் நிறுவனம் மூலம் திட்டங்கள் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கூடலூர் பகுதியில் பிரிவு 17 அரசு நிலங்களில் வசிக்கும் மக்களின் மின் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு மின் இணைப்பு விரைவில் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல் இவர்களுக்கு பட்டா வழங்குவதற்கும் தமிழக முதல்வரின் தனி செயலாளர் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் விரைவில் முடிவடைந்து விரைவில் கூடலூரில் உள்ள பிரிவு 17 நிலப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். கூடலூர் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய தோட்ட தொழிலாளர்களுக்கு தற்போது குடும்ப அட்டைகளுக்கு ஒரு லிட்டர் மண் எண்ணெய் வழங்கப்படுகிறது. இதனை உயர்த்தி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் சுமார் 12,000 குடும்பங்களின் கார்டுகளுக்கு 4 லிட்டர் மண் எண்ணெய் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இதனையடுத்து ஓவேலி பேரூராட்சியில் வளர்ச்சி பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.80 லட்சத்திற்கான உத்தரவு மற்றும் காசோலையினை மேடையில் பேரூராட்சி தலைவர் சித்ராதேவி, செயல் அலுவலர் ஹரிதாஸ் ஆகியோரிடம் வழங்கினார். நிறைவாக தாசில்தார் சித்தராஜ் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் கூடலூர் நெல்லியாளம் நகர்மன்ற உறுப்பினர்கள் பரிமளா, சிவகாமி, ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, தேவர்சோலை பேரூராட்சி செயல் தலைவர் இப்ராகிம் ஷா, பேரூராட்சி தலைவர்கள் சித்ராதேவி, வள்ளி, வார்டு உறுப்பினர் செக்கீலா, கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம் காரம், தோட்டக்கலை துணை இயக்குனர் சிபிலா மேரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் உமா சங்கர், கூடலூர் நகராட்சி ஆணையர் பிரான்சிஸ் சேவியர், கூடலூர் நகர திமுக செயலாளர் இளஞ்செழியன், ஒன்றிய செயலாளர் லியாகத் அலி மற்றும் அனைத்து அரசுத்துறை ஊழியர்கள் பணியாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர், பழங்குடியின மக்களின் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

The post கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி துவங்கியது appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Nilgiri ,Kuddalore ,Perfume Exhibition ,
× RELATED நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை...