×

திருவாரூர் மாவட்டத்தில் மழை பாதிப்பு பருத்தி, எள் பயிர்கள் கணக்கெடுப்பு-அதிகாரிகள் தொடங்கினர்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி, எள் பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.திருவாரூர் மாவட்டத்தில் வழக்கமாக 15 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே பருத்தி பயிரிடப்படுவது வழக்கம். இந் நிலையில் திமுக அரசு பொறுப்பேற்ற பின் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க ப உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் கடந்தாண்டு 40 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டது.

கடந்தாண்டு அதற்கு முன் இல்லாத வகையில் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ 12 ஆயிரம் வரையில் விலை கிடைத்தது. நடப்பாண்டு 41 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடைபெற்றது. மேலும் திருத்துறைபூண்டி மற்றும் வலங்கைமான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 12 ஆயிரத்து 500 ஏக்கரில் எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 30-ம் தேதி முதல் அவ்வவ்போது பெய்த மிதமான மழையால் இந்த பருத்தி மற்றும் எள் பயிர்கள் மழை நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது.

இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர். அதன்படி, நன்னிலம், வலங்கைமான், கொரடாச்சேரி, நீடாமங்கலம் மற்றும் திருவாரூர் ஒன்றியங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிரும், திருத்துறைப்பூண்டி மற்றும் திருவாரூர் ஒன்றியங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் எள் பயிரும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பருத்தி மற்றும் எள் பயிர்கள் குறித்து ஆய்வு செய்து கணக்கெடுப்பு நடத்த கலெக்டர் சாரு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் வேளாண் அலுவலர்கள் ஆய்வு செய்து கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களை காப்பாற்றுவது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர். அதன்படி, நன்னிலம் தாலுக்காவில் வீதிவிடங்கன், தட்டாதிமூலை, சலிப்பேரி, ஆணைகுப்பம் உட்பட பல்வேறு வருவாய் கிராமங்களில் பாதிக்கப்பட்ட எள் பயிர்களை வேளாண்மை துணை இயக்குனர் லெட்சுமிகாந்தன் தலைமையில், உதவி இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா, அலுவலர்கள் சின்னப்பன், துவாரகநாதன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

பயிர்களை காப்பாற்ற வடிகால் வசதி

பாதிக்கப்பட்ட வயல்களில் உடனடியாக வடிகால் வசதி ஏற்படுத்தி மழை நீரை வடியவைக்க வேண்டும். வாடல் நோயை கட்டுப்படுத்த ஆக்ஸிகுலோரைடு 2.5 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வேர்கள் நனையுமாறு ஊற்ற வேண்டும். மேலும் பூக்கள் உதிராமல் இருக்க பிளானோபிக்ஸ் 175 மில்லி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கர் பருத்தி செடிகளில் தெளிக்க வேண்டும். மேலும் செடிகள் வளர்ச்சியை மீட்டெடுக்க 19 : 19 : 19 என்ற கலப்பு உரத்தை ஒரு சதவீதம் இலை வழியாக தெளிக்க வேண்டும், மேலும் காய் அழுகலை கட்டுப்படுத்திட கார்பெண்ட்சிம் 500 கிராம் மருந்தை ஒரு ஹெக்டேர் பருத்தி பயிரில் தெளித்து கட்டுப்படுத்தலாம் என அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.

The post திருவாரூர் மாவட்டத்தில் மழை பாதிப்பு பருத்தி, எள் பயிர்கள் கணக்கெடுப்பு-அதிகாரிகள் தொடங்கினர் appeared first on Dinakaran.

Tags : Thiruvarur district ,Thiruvarur ,Tiruvarur district ,
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்