×

ஒழுங்குமுறை விற்பனைகூடத்தில் விவசாயிகள் 4 டன் கொப்பரை தேங்காய் இருப்பு வைப்பு

*நெல்லிற்கு ₹68 லட்சம் பொருளீட்டு கடன்

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் தென்னை, 6 ஆயிரம் ஹெக்டேர் நெல், 5 ஆயிரம் ஹெக்டேர் வாழை, சுமார் 24 ஆயிரம் ஹெக்டேர் ரப்பர் மற்றும் நறுமணபொருட்களான கிராம்பு, திப்பிலி, ஜாதிக்காய், நல்லமிளகு உள்ளிட்ட பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குமரி தேங்காய்க்கு மற்ற மாவட்டங்கள், மாநிலங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. தேங்காய் நல்ல அடர்த்தியாக இருப்பதுடன், எண்ணெய் சத்தும் அதிகமாக இருக்கும். மேலும் தேங்காய் பெரியதாகவும் இருக்கும். இதனால் வெளி மாவட்டங்களுக்கு இங்கிருந்து தினமும் லட்சகணக்கான தேங்காய்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. வியாபாரிகள், விவசாயிகளின் தோட்டத்திற்கு நேரடியாக வந்து கொள்முதல் செய்து வந்தனர்.

இதனால் விவசாயிகளுக்கு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நல்ல வருமானம் கிடைத்து வந்தது. தற்போது தேங்காய் கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். குமரி மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து தேங்காய்களை குறைந்து விலைக்கு வாங்கி வரும் வியாபாரிகள், அவற்றை குமரி மாவட்ட தேங்காய் என பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இதனால் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைத்து வருகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தேங்காய்களை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் ₹23க்கு குறைந்த விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். இதனால் தென்னை விவசாயிகள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

வெளி மாவட்ட தேங்காய்களை, குமரி மாவட்ட தேங்காய்களுடன் கலந்து விற்பனை செய்யகூடாது எனவும், வெளி மாவட்ட தேங்காய், குமரி மாவட்ட தேங்காய்களை தனிதனியாக வைத்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் விற்பனைக்குழு செயலாளர் விஷ்ணப்பன் உத்தரவிட்டு இருந்தார். மேலும் கொப்பரை தேங்காய்களை குமரி மாவட்ட விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இருப்பு வைத்து விற்பனை செய்யலாம் என கூறப்பட்டு இருந்தது.

ஆனால் வெளி மார்க்கெட்டில் தற்போது கொப்பரை தேங்காய் ₹85 முதல் ₹87வரை கொள்முதல் செய்வதால், போதிய விலைகிடைக்காத விவசாயிகள் கிருஷ்ணன்கோவில், மற்றும் திங்கள் சந்தையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் தென்னை விவசாயிகள் கொப்பரை தேங்காய்களை இருப்பு வைத்து வருகின்றனர். இங்கு இருப்பு வைக்கப்படும் கொப்பரை தேங்காயை தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம், தமிழ்நாடு மாநில கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் ₹108க்கு கொள்முதல் செய்யப்படவுள்ளது.

மேலும் குமரி மாவட்டத்தில் விளையக்கூடிய நெல்கள் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனை தவிர வெளி மார்க்கெட்டுகளில் சரியான விலை கிடைக்காத விவாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் இருப்பு வைத்து பொருளீட்டு கடன் பெறவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் 2022-23ம் ஆண்டு விவசாயிகள் 1027 மெட்ரிக் டன் நெல் இருப்பு வைத்து பொருளீட்டு கடன் ₹68 லட்சத்து 5 ஆயிரம் பெற்றுள்ளனர். இதன் மூலம் 42 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். இந்த ஆண்டும் விவசாயிகள் நெல் இருப்பு வைத்து வருகின்றனர்.

ஏக்கருக்கு 291 கிலோ கொப்பரை கொள்முதல்

கன்னியாகுமரி விற்பனைக்குழு செயலாளர் விஷ்ணப்பன் கூறியதாவது: கன்னியாகுமரி விற்பனைக்குழுவின் வடசேரி மற்றும் திங்கள்சந்தை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மத்திய அரசின் விலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் 2023ம் ஆண்டு நடப்பு பருவத்தில் அரவைக் ெகாப்பரை 1.4.2023 முதல் 30.9.2023 முடிய குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்திட தமிழக அரசு அறிவித்துள்ளது. கொள்முதல் செய்யப்படும் கொப்பரை தேங்காய் எடைபோடும்போது அயல் பொருட்கள் 1 சதவீதம் இருக்கலாம். அதுபோல் பூஞ்சாணம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை 10 சதவீதம், சுருக்கம் கொண்ட கொப்பரை 10 சதவீதம், ஈரப்பதம் 6 சதவீதம் இருக்கலாம்.

இந்த சதவீதத்தில் இருக்கும் கொப்பரைகள் கொள்முதல் செய்வதற்கு விற்பனைகுழு பரிந்துரை செய்யும். கொள்முதல் செய்யப்படும்போது அரவை கொப்பரை கிலோ ஒன்றுக்கு ₹108.80 கிடைக்கும். அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு 291 கிலோ கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் செய்யப்படும் அரவை கொப்பரைக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் தென்னை விவசாயிகள் தங்களது நிலத்திற்கான நில சிட்டா அசல், தென்னை சாகுபடி பரப்பு அடங்கல் அசல், ஆதார் அட்டை நகல், வங்கி சேமிப்புக் கணக்கு புத்தக முதல்பக்க நகல் மற்றும் புகைப்படம் ஆகிய விவரங்களுடன் வடசேரி மற்றும் திங்கள் சந்தை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தினை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். இதனை குமரி மாவட்ட தென்னை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளவேண்டும். தற்போது திங்கள்சந்தை ஒழுங்குமுறை விற்பனைகூடத்தில் 2.5 டன், கிருஷ்ணன்கோவில் ஒழுங்குமுறை விற்பனைகூடத்தில் 1.5 டன் கொப்பரை தேங்காய் விவசாயிகள் வைத்துள்ளனர். என்றார்.

The post ஒழுங்குமுறை விற்பனைகூடத்தில் விவசாயிகள் 4 டன் கொப்பரை தேங்காய் இருப்பு வைப்பு appeared first on Dinakaran.

Tags : Nagargo ,Kumari District ,
× RELATED கன்னியாகுமரி மீனவர் குஜராத் கடலில் மாயம்