×

ஏ.ஜெட்டிஅள்ளி உழவர் சந்தையில் சோலார் குளிர்பதன கிடங்கு

தர்மபுரி, மே 13: தர்மபுரி மாவட்டத்தில் முதன்முறையாக ஏ.ஜெட்டிஅள்ளி உழவர் சந்தையில் ₹15 லட்சம் மதிப்பீட்டில் சோலார் குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. உழவர் சந்தையில் விற்பனை ஆகாத காய்கறி, பழங்கள் 5 டன் ஒரேநேரத்தில் சேமித்து வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் 1999ம் ஆண்டு திமுக அரசால் உழவர் சந்தை கொண்டுவரப்பட்டது. தற்போது, தமிழகம் முழுவதும், 179 உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன. மேலும், புதிய உழவர் சந்தைகள் அமைக்க அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. தர்மபுரியில் கடந்த 2000ம் ஆண்டு முதல் உழவர் சந்தை திறக்கப்பட்டது. பின்னர் மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு, அரூர், ஏ.ஜெட்டிஅள்ளி ஆகிய இடங்களில் உழவர் சந்தை திறக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 5 உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன. புதியதாக காரிமங்கலத்தில் உழவர்சந்தை அமைக்கும் பணி நடக்கிறது. தர்மபுரி உழவர் சந்தையில் தினசரி சராசரி 30 டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மதிப்பு ₹10 லட்சம். 120 விவசாயிகள் 60 வகையான காய்கறிகளை கொண்டு வருகின்றனர். தினசரி சுமார் 7300 நுகர்வோர் வந்து காய்கறி, பழங்கள் வாங்கி செல்கின்றனர். விஷேசம் மற்றும் பண்டிகை காலங்களில் கூடுதலாக காய்கறி விற்பனை நடக்கும்.

இதுபோல், ஏ.ஜெட்டிஅள்ளியில் 9 டன் காய்கறியும், பாலக்கோட்டில் 8.40 டன்னும், பென்னாகரத்தில் 7.30 டன்னும், அரூரில் 8.20 டன் காய்கறி, பழங்கள் தினசரி விற்பனை செய்யப்படுகின்றன. விற்பனை ஆகாத காய்கறி, பழங்கள் வீணாகாமல் இருக்க உழவர்சந்தையில் சூரியஒளியில் இயங்கும் குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள உழவர்சந்தைகளில் இந்த சூரிய ஒளியில் இயங்கும் குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், தர்மபுரி மாவட்டத்தில் ஏ.ஜெட்டிஅள்ளி உழவர்சந்தையில், சூரிய ஒளியில் இயங்கும் குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. ₹15 லட்சம் மதிப்பீட்டில் இந்த சூரிய ஒளியில் இயங்கும் குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. விற்பனை ஆகாமல் உள்ள காய்கறி, பழங்களை, இந்த குளிர்பதன கிடங்களில் வைத்து விற்பனை செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரேநேரத்தில் 5 டன் காய்கறி, பழங்கள் வைத்து பாதுகாக்கலாம்.

தர்மபுரி ஏ.ஜெட்டிஅள்ளி உழவர் சந்தையில் 31 கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் தினசரி 8 முதல் 10 டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நேரில் வந்து காய்கறி, பழங்கள் வாங்கி செல்கின்றனர். சுழற்சி முறையில் விவசாயிகள் 50 வகையான காய்கறி, பழங்களை கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். விற்பனை ஆகாத காய்கறிகள், பழங்கள் உழவர் சந்தையில் உள்ள குளிர்பதன கிடங்கில் வைத்து பாதுகாக்கின்றனர். மறுநாள் விற்பனை ஆகாத காய்கறி, பழங்களை எடுத்து விற்பனை செய்கின்றனர். இதனால் காய்கறி, பழங்கள் வீணாவது தவிர்க்கப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நாங்கள் நீண்ட தொலைவில் இருந்து காய்கறி, பழங்கள் கொண்டுவருகிறோம். விற்பனை ஆகாத காய்கறிகளை மீண்டும் எடுத்துச்செல்வோம். இதில் சில காய்கறி, பழங்கள் அழுகிவிடும். இதனால் பெரிய இழப்பு ஏற்பட்டது. தற்போது சோலார் சிஸ்டத்தில் குளிர்பதன கிடங்கு உழவர் சந்தை வளாகத்தில் அரசு அமைத்துள்ளது. இந்த குளிர்பதன கிடங்கை காய்கறி, பழக்கடை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்கின்றனர். இதனால் காய்கறி, பழங்கள் வீணாவது குறைந்துள்ளது. பணம் சேமிக்கப்படுகிறது என்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் 5 இடத்தில் உழவர்சந்தை இயங்கி வருகின்றன. 6வதாக காரிமங்கலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஐந்து உழவர்சந்தைகளில் தினசரி சுமார் 64 டன் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன்மதிப்பு ₹20 லட்சம். தர்மபுரி மாவட்டத்தில் முதன்முறையாக ஏ.ஜெட்டிஅள்ளி உழவர் சந்தையில் சூரிய ஒளியில் இயங்கும் குளிர்சாதன வதியுடன் கூடிய கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் உழவர் சந்தையில் விற்பனை செய்தபின்னர் மீதமுள்ள காய்கறி, பழங்களை விவசாயிகள் இந்த குளிர்பதன கிடங்கில் வைத்து பாதுகாக்கின்றனர். இதனால் காய்கறி, பழங்கள் அழுகி வீணாவது குறைந்துள்ளது. படிப்படியாக அனைத்து உழவர் சந்தையிலும், எதிர்காலத்தில் சோலார் குளிர்பதனக்கிடங்கு அமைக்கப்படும். ஏ.ஜெட்டிஅள்ளி உழவர் சந்தையில் ₹15லட்சம் மதிப்பீட்டில் 5 டன் காய்கறி, பழங்கள் வைத்து சேமிக்கும் சூரிய ஒளியில் இயங்கும் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

The post ஏ.ஜெட்டிஅள்ளி உழவர் சந்தையில் சோலார் குளிர்பதன கிடங்கு appeared first on Dinakaran.

Tags : Jettialli Farmers Market ,Dharmapuri ,Dharmapuri District ,A. Jettyalli Farmers Market ,Dinakaran ,
× RELATED சூதாடிய 4 பேர் கைது