×

சுற்றுலா பயணிகளை தாக்கிய 4 பரிசல் ஓட்டிகளின் உரிமம் ரத்து

பென்னாகரம், மே 13: ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளை தாக்கிய 4 பரிசல் ஓட்டிகளின் உரிமத்தை ரத்து செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் அருவியல் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வர். இந்நிலையில் கோடை விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் கர்நாடக பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகள், ஒகேனக்கல்லுக்கு வந்துள்ளனர். அவர்கள் மாமரத்துக்கடவு பகுதியில் பரிசலில் செல்ல சென்றனர்.

அப்போது பரிசலில் செல்ல பணம் எவ்வளவு என பரிசலோட்டிகளிடம் சுற்றுலா பயணிகள் கேட்டபோது, வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பரிசல் ஓட்டிள், சுற்றுலா பயணிகளை தாக்கியுள்ளனர். இதை அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை பார்த்த மாவட்ட கலெக்டர் சாந்தி, சம்பந்தப்பட்ட பரிசல் ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க, ஒகேனக்கல் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், சுற்றுலா பயணிகளிடம் அத்துமீறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட பரிசல் ஓட்டிகளான ராமர், கண்ணையன், ராமச்சந்திரன், ெபருமாள் ஆகிய 4பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து பரிசலை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் பரிசல் ஓட்டுவதற்கான உரிமத்தையும் ரத்து செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

The post சுற்றுலா பயணிகளை தாக்கிய 4 பரிசல் ஓட்டிகளின் உரிமம் ரத்து appeared first on Dinakaran.

Tags : Bennagaram ,Okanagan.… ,Dinakaran ,
× RELATED கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது