×

கடந்த ஆண்டைவிட தேர்ச்சி விகிதம் குறைந்தது சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு

சென்னை: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்னும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவியருக்கான தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ நேற்று வெளியிட்டது. 10ம் வகுப்பு 93.12%, 12ம் வகுப்பு 87.33% மொத்த தேர்ச்சி வீதம் பெற்றுள்ளன. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு, இரண்டு வகுப்புகளிலும் தேர்ச்சி வீதம் குறைந்துள்ளன. மாணவர்களை விட மாணவியர்கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மண்டல அளவிலான தேர்ச்சியில் திருவனந்தபுரம் முதலிடம் பிடித்துள்ள நிலையில், சென்னை 3ம் இடத்தை பிடித்துள்ளது.

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: நாடு முழுவதும் உள்ள 16728 பள்ளிகளில் 12ம் வகுப்பில் படித்த மாணவ மாணவியருக்கு, 2023 பிப்ரவரி 15ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை பொதுத்தேர்வுகள் நடந்தன. இதற்காக நாடு முழுவதும் 6759 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த தேர்வில் நாடு முழுவதும் 16 லட்சத்து 80 ஆயிரத்து 256 மாணவ மாணவியர் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். அவர்களில் 16 லட்சத்து 60 ஆயிரத்து 511 பேர் தேர்வில் பங்கேற்றனர். அவர்களில் 14 லட்சத்து 50 ஆயிரத்து 174 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 87.33 சதவீதம். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சியில் 5.38 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு மொத்த தேர்ச்சி 92.71 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளில் உள்ள பள்ளிகளில் படித்தவர்கள் 19420 பேர் எழுதினர். அவர்களில் 17981 பேர் தேர்்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 92.59%. நாடு முழுவதும் தேர்வு எழுதியுள்ளவர்களை பொருத்தவரையில் மாணவர்களை விட மாணவியர் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 90.68%, மாணவர்கள் 84.67% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவியர் 6.01% கூடுலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்வு: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த பிப்ரவரி15ம் தேதி தொடங்கி மார்ச் 21ம் தேதி வரை நடந்தது. நாடு முழுவதும் உள்ள 24480 பள்ளிகளில் படித்த 21 லட்சத்து 84 ஆயிரத்து 117 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். அவர்களுக்காக 7241 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்வில் 21 லட்சத்து 65 ஆயிரத்து 805 மாணவ மாணவியர் மட்டுமே பங்கேற்றனர். அவர்களில் 20 லட்சத்து 16 ஆயிரத்து 779 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி வீதம் 93.12% கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 1.28 % தேர்ச்சி பத்தாம் வகுப்பில் குறைந்துள்ளது. வெளிநாடுகளில் இயங்கும் பள்ளிகள் மூலம் 25391 பேர் பதிவு செய்திருந்த நிலையில், 25186 பேர் தேர்வில் பங்கேற்றனர். அவர்களில் 24667 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி 97.94 சதவீதம். பத்தாம் வகுப்பு தேர்வில் பங்கேற்றவர்களில் அனைத்து பாடங்களிலும் மாணவியர் 94.25 சதவீதமும், மாணவர்கள் 92.27 சதவீதமும், மாற்றுப்பாலினத்தவர் 90 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிறப்பு குழந்தைகள் பிரிவில் 7286 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 7154 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். 6627 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 92.63%. தேர்வில் அனைத்து பாடங்களிலும் 90 சதவீதம் மற்றும் அதற்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றவர்கள் 1 லட்சத்து 95 ஆயிரத்து 799 பேர்(9.04%). அனைத்து பாடங்களிலும் 95 சதவீதம் மற்றும் அதற்கு மேலும் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிபெற்றவர்கள் 44297 பேர்(2.05%). அதேபோல சிறப்பு குழந்தைகளில் 90 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 278, 95 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 58 பேர். பத்தாம் வகுப்பு தேர்வில் பங்கேற்றவர்களில் 134774 பேர் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கும் என சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யாம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

மண்டல வாரியாக
தேர்ச்சி வீதம்
மண்டலம் 10ம் வகுப்பு 12ம் வகுப்பு
திருவனந்தபுரம் 99.91 99.91
பெங்களூர் 99.18 98.64
சென்னை 99.14 97.40
அஜ்மீர் 97.27 89.27
புனே 96.92 87.28
பாட்னா 94.57 85.47
சண்டிகர் 93.84 91.84
புவனேஸ்வர் 93.64 83.89
பிரயாக்ராஜ் 92.55 78.05
நொய்டா 92.50 80.36
பஞ்ச்குலா 92.33 86.93
போபால் 91.24 83.54
மேற்குடெல்லி 90.67 93.24
டேராடூன் 90.61 80.26
கிழக்கு டெல்லி 88.30 91.50
கவுஹாத்தி 76.90 83.73

The post கடந்த ஆண்டைவிட தேர்ச்சி விகிதம் குறைந்தது சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Central Board of Intermediate Education ,CBSE ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...