×

மாய மானால்தான் முதல்வரானார் சண்டிக்குதிரை எடப்பாடி எதற்கும் பயன்படாது: வைத்திலிங்கம் பதிலடி

சென்னை: ‘சண்டிக்குதிரையான எடப்பாடி பழனிசாமி எதற்கும் பயன்படாது’ என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கடுமையாக விமர்சித்துள்ளார். ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தஞ்சாவூரில் நேற்று அளித்த பேட்டி: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனை சந்தித்தபோது ஓ.பன்னீர்செல்வத்துடன், பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டுமே சென்ற நிலையில், ஜேசிடி பிரபாகரன், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கு உடன்பாடு இல்லை என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி கற்பனையாக பேசுவது, அவர் வகித்த பதவிக்கு அழகல்ல.

மாயமானையும், மண்குதிரையையும் நம்பி சென்றால் கரை சேர முடியாது என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். அந்த மாயமான் இல்லாவிட்டால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகி இருக்க முடியாது. தூதுவிட்டு காலில் விழுந்து, முதல்வராகி அவர்களையே மாயமான் என்றும், துரோகி என்றும், வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசும் எடப்பாடி பழனிச்சாமி, கடந்த காலத்தை எண்ணிப்பார்க்க வேண்டும். தினகரனின் கடைக்கண் பார்வை படாதா என ஏங்கிக்கொண்டிருந்த எடப்பாடி பழனிச்சாமி இன்றைக்கு அதிகாரம் பலம், பணபலத்தை வைத்துக்கொண்டு அதிமுக என்ற கட்சியை தனது சொத்தாக மாற்ற நினைக்கிறார். இதை ஒருபோதும் அண்ணா திமுகவின் தொண்டர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

மண்குதிரை எனக்கூறும் எடப்பாடி பழனிச்சாமி ஒரு சண்டிக்குதிரை. எதற்கும் பயன்படாது. இரட்டை இலை சின்னம் இல்லாவிட்டால் எடப்பாடி பழனிச்சாமிக்கு இரண்டு சதவீதம் கூட வாக்கு இருக்காது. ஓபிஎஸ், தினகரன் சந்திப்பை அதிமுக தொண்டர்கள் 95 சதவீதம் பேர் வரவேற்று உள்ளனர். காலில் விழுந்து பதவிக்கு வந்தவர்களை, எடப்பாடி பழனிச்சாமி சூரியனை பார்த்து நாய் குரைப்பது போல் என கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியை தவிர்த்து விட்டு அண்ணா திமுக ஒன்றுபடும். எடப்பாடி பழனிச்சாமி கூடாரத்தில் உள்ள ஆட்டுக்குட்டிகள் எல்லாம் எப்போது வெளியில் வரலாம் என காத்துக்கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post மாய மானால்தான் முதல்வரானார் சண்டிக்குதிரை எடப்பாடி எதற்கும் பயன்படாது: வைத்திலிங்கம் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Maya ,Chieftain ,Chandikuthirai ,Edappadi ,Vaithilingam ,CHENNAI ,OPS ,Edappadi Palaniswami ,Maya Maan ,Chief Minister ,Dinakaran ,
× RELATED அமீரக தமிழ் சங்க பொங்கல் விழா