×

சீர்காழி, நாகர்கோவிலில் கோர விபத்து தந்தை, மகன் உட்பட 8 பேர் பலி: 40 பேர் படுகாயம்

சீர்காழி/ நாகர்கோவில்: சீர்காழி, நாகர்கோவிலில் நடந்த கோர விபத்தில் தந்தை, மகன் உட்பட 8 பேர் பலியாகினர். 40 பயணிகள் படுகாயமடைந்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் பனங்குடியில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை எண்ணூருக்கு 25 ஆயிரம் லிட்டர் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பாதரக்குடி பைபாஸ் சாலையில் சென்றபோது திடீரென லாரி நின்றதால், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது, இரவு 11.30 மணியளவில் அவ்வழியாக திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னைக்கு 43 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு விரைவு போக்குவரத்து பஸ், சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டேங்கர் லாரி பக்கவாட்டில் மோதிவிட்டு, எதிரே சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த டூ வீலர் மீது மோதியது.

இதில் டூ வீலரில் வந்த சிதம்பரம் அடுத்த வெய்யலூரை சேர்ந்த பத்மநாபன்(39), அவரது மகன் அருள்ராஜ் (15) மற்றும் எம்கே தோட்டம் முருகன் கோயில் தெருவை சேர்ந்த பாலமுருகன்(39) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பஸ்சின் முன்பகுதி சீட்டில் உட்கார்ந்திருந்த கண்டக்டர் விஜயசாரதி உள்பட 32 பயணிகள் படுகாயமடைந்தனர். அனைவரும் சிகிச்சைக்காக சீர்காழி அரச்ய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயசாரதி இறந்தார். இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்: குமரி மாவட்டம் அருமனை, சிதறால், திருவரம்பு, மார்த்தாண்டம், திருவிதாங்கோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் கொண்ட நடன குழுவினர் நேற்று முன் தினம் காலை திருச்செந்தூர் அருகே உள்ள கருங்குளம் பகுதியில் உள்ள கோயில் திருவிழாவுக்கு காரில் சென்றிருந்தனர். இந்த குழுவில் 9 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் இடம் பெற்றிருந்தனர். நிகழ்ச்சி முடிந்து நேற்று அதிகாலை காரில் மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர். காலை சுமார் 6 மணியளவில் ஆரல்வாய்மொழி லாயம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது, எதிரே நாகர்கோவிலில் இருந்து ரோஸ்மியாபுரத்துக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் பயங்கரமாக மோதியது.

இதில், திருவரம்பு அம்பாங்காலை பகுதியை சேர்ந்த அஜித் (23), அருமனை குழிச்சான்விளை பகுதியை சேர்ந்த அபிஷேக் (எ) சிஞ்சு (19), சிதறால் வெள்ளாங்கோடு செங்கல்விளை பகுதியை சேர்ந்த கண்ணன் (24) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்ற 9 பேர் சிகிச்சைக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, கார் டிரைவர் திருவிதாங்கோடு கைதக்குழி காலனி பகுதியை சேர்ந்த சதீஷ் (37) என்பவர் உயிரிழந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மேயர் மகேஷ் ஆகியோர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

* 5,000 லிட்டர் கச்சா எண்ணெய் வீண்
அரசு பஸ் மோதியதில் டேங்கர் லாரியில் ஓட்டை விழுந்து கச்சா எண்ணெய் கொட்டியது. நேற்று காலை வரை 5,000 லிட்டர் கச்சா எண்ணெய் கீழே கொட்டி வீணானது. பின்னர் மற்றொரு டேங்கர் லாரி வரவழைக்கப்பட்டு கச்சா எண்ணெய் மாற்றப்பட்டது.

* உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வர் உத்தரவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நாகர்கோவிலில் நடந்த விபத்தில் சதீஷ் (37), கண்ணன் (23), அஜித் (22), அபிஷேக் (22) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இந்த விபத்தில் படுகாயமடைந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் சஜிதா (37), நிதிஷ் (22), விக்னேஷ் (22), நிஷாந்த் (18), சஜின் (18), சிறுமி அனாமிகா (11) ஆகியோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வரும் 6 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post சீர்காழி, நாகர்கோவிலில் கோர விபத்து தந்தை, மகன் உட்பட 8 பேர் பலி: 40 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Sirkazhi, Nagercoil ,Sirkazhi ,Nagarkoil ,Nagerkoil, Sirkazhi ,Dinakaran ,
× RELATED சீர்காழியில் பரபரப்பு கோழியை வேட்டையாடிய நல்ல பாம்பு பிடிபட்டது