×

கிண்டி, சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.95 லட்சம் செலவில் புனரமைத்து மேம்படுத்தப்பட்ட ஆய்வகம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்

சென்னை: கிண்டி, சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.95 லட்சம் செலவில் புனரமைத்து மேம்படுத்தப்பட்ட ஆய்வகத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு சிட்கோ தொழிற்பேட்டையில் 1965ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தொழில் கூட்டுறவு பகுப்பாய்வு ஆய்வகத்தில் மருந்து தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட மருந்துகளை, குறைந்த விலையில், ரசாயன பகுப்பாய்வு செய்து சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த ஆய்வு கூடத்திற்கான கட்டிடத்தை புதுப்பிக்கவும், பழுது பார்க்கவும், புதிய உபகரணங்களை கொண்டு மேம்படுத்தவும், ரூ.95 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வகத்தில் ரசாயன பகுப்பாய்வு, இயற்பியல்-வேதியியல் பகுப்பாய்வு, கருவி பகுபாய்வு, நுண்ணுயிரியல் பகுப்பாய்வு மேற்கொள்ளப்படும். புதிதாக புனரமைக்கப்பட்ட இந்த ஆய்வகத்தை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று முன்தினம் திறந்து வைத்து, தயாரிப்பாளர்கள் ஆய்வகத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து, கிண்டி தொழிற்பேட்டையில் குறுந்தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் ரூ.90.13 கோடி மதிப்பீட்டில் 1,97,024 சதுர அடி பரப்பளவில் 6 தளங்கள், 152 தொழிற்கூடங்களுடன், கட்டப்பட்டு வரும் பன்னடுக்கு தொழில் வளாக கட்டுமான பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார்.

அப்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன், “தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் மின் தூக்கிகள், கனரக வாகனங்கள் இடையூறு இல்லாமல் வந்து செல்லும் வகையில் சாலை பணிகள், இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை நல்ல முறையில் அமைக்க வேண்டும். கட்டிடத்தின் தரத்தை ஒவ்வொரு நிலையிலும் பொறியாளர்கள் உறுதி செய்து வரும் டிசம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்” என அறிவுறுத்தினார். ஆய்வு கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அருண்ராய், சிட்கோ மேலாண்மை இயக்குநர் மதுமதி, தொழில் வணிக கூடுதல் ஆணையர் கிரேஸ் பச்சாவ், கண்காணிப்பு பொறியாளர்கள் உடனிருந்தனர்.

The post கிண்டி, சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.95 லட்சம் செலவில் புனரமைத்து மேம்படுத்தப்பட்ட ஆய்வகம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : CITCO Industrial Estate ,Guindy ,Minister Thamo Anparasan ,CHENNAI ,Citco ,Industrial Estate, Guindy ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை...