×

அதானி குழும முறைகேடு விவகாரத்தில் செபிக்கு கூடுதலாக 6 மாத அவகாசம் வழங்க முடியாது; உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: அதானி குழுமம் முறைகேடு விவகாரத்தில் தற்போது இருக்கும் சூழலில் செபி அமைப்புக்கு மேலும் ஆறு மாதம் கூடுதலாக கால அவகாசம் வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், அதுகுறித்து வரும் 15ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளது. அதானி குழுமம் கணக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் ஆய்வு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி வெளியிட்டது. இதையடுத்து அதானி நிறுவனம் பல்வேறு சிக்கல்களில் சிக்கியுள்ளது.

இதையடுத்து அதானி விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு, ‘‘உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில் கடந்த மார்ச் மாதம் குழு அமைத்தது. மேலும் இரண்டு மாதத்தில் அதானி குழுமம் தொடர்பான விவகாரத்தில் ஆய்வறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அப்போது உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக நிபுணர் குழுவும் சீலிடப்பட்ட கவரில் உச்ச நீதிமன்றத்தில் ஆய்வறிக்கையை தாக்கல் செய்தது. இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக செபி அமைப்பு தனது தரப்பு ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய மேலும் ஆறு மாதம் அவகாசம் வேண்டும்’’ என்று கேட்டிருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில்,‘‘அதானி குழுமம் – ஹிண்டன்பர்க் விவகாரத்தில் நிபுணர் குழு வழங்கிய அறிக்கையை பெற்றுக்கொண்டோம். அதனை நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது. தற்போதையை சூழலில் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வறிக்கை தாக்கல் செய்ய செபி அமைப்புக்கு கூடுதலாக ஆறு மாதம் அவகாசம் வழங்க முடியாது. அதுகுறித்து வரும் திங்கட்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும்’’ என தெரிவித்த நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

The post அதானி குழும முறைகேடு விவகாரத்தில் செபிக்கு கூடுதலாக 6 மாத அவகாசம் வழங்க முடியாது; உச்ச நீதிமன்றம் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : SEBI ,Adani Group ,Supreme Court ,New Delhi ,Dinakaran ,
× RELATED அதானி முறைகேடு விவகாரம்; இன்னொரு...