×

கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது யார்? இன்று காலை 10 மணிக்கு முடிவு தெரியும்: தொங்கு சட்டசபை அமைந்தால் குமாரசாமி ஆதரவை பெற காங்., பாஜ முயற்சி

பெங்களூரு: கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது. காலை 10 மணி அளவில் முன்னணி நிலவரம் வெளியானதும் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்ற விவரம் தெரியவரும். அதே நேரத்தில் கருத்து கணிப்புகள்படி யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில், மஜத தலைவர்கள் தேவகவுடா மற்றும் குமாரசாமியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ வாக்குப்பதிவு கடந்த 10ம் தேதி நடைபெற்ற‌து. இதில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாயின. இந்த தேர்தலில் ஆளும் பாஜ 224, எதிர்க்கட்சியான‌ காங்கிரஸ் 223, மஜத 207 உட்பட மொத்தமாக 2613 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.

முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிகோன் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து அமைச்சர் சோமண்ணா களமிறக்கப்பட்டுள்ளார். மஜத தலைவர் குமாரசாமி சென்னபட்ணா தொகுதியிலும், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிட்டுள்ளனர். டி.கே.சிவகுமாரை எதிர்த்து அமைச்சர் ஆர்.அசோக் களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ், பாஜ, மஜத ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. மாநிலத்தில் மொத்தமுள்ள 34 மையங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால், மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும், 24 மணி நேரமும் கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முன்னணி நிலவரம் வெளியானதும் காலை 10 மணி அளவில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது தெரிந்துவிடும்.

இந்நிலையில் பல்வேறு நிறுவனங்களின் சார்பில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றில் அதாவது 10 கருத்துக் கணிப்புகளில் 7 கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும், பாஜ ஆட்சியை இழக்கும் என்று தெரிவித்துள்ளன. அதேநேரம் முழு பெரும்பான்மை எண்ணிக்கையில் காங்கிரசுக்கு சீட்கள் கிடைக்குமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளதால், தொங்கு சட்டசபை அமையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவ்வாறு தொங்கு சட்டசபை அமையும் பட்சத்தில் மஜத கட்சி, யாருக்கு ஆதரவு அளிக்கவுள்ளதோ? அந்த கட்சி தான் ஆட்சியமைக்க முடியும் என்று நிலையும் ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த கட்சிக்கு மவுசு அதிகரித்துள்ளது.
காங்கிரஸ் – பாஜ கட்சிகளின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில் மஜத சட்டமன்றக் கட்சித் தலைவர் எச்.டி.குமாரசாமி, திடீரென சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்.

முன்னதாக அவர் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘கருத்துக்கணிப்புகளை பார்க்கும் போது, புதிய அரசு அமைவதில் மஜத-வின் பங்கு அதிகமாக இருக்கவாய்ப்புள்ளது. எங்களது கட்சி 50 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. எனது நிபந்தனைகளை எந்தக் கட்சி நிறைவேற்றுகிறதோ அதைப் பொறுத்து தான் பாஜ அல்லது காங்கிரசுடன் கூட்டணி அமைப்பேன்’ என்றார். கடந்த காலங்களில் அதாவது 2004, 2008, 2018 ஆகிய ஆண்டுகளில் கூட்டணி அரசு அமைந்தும், அந்த அரசுகள் கவிழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே பெங்களூருவில் மல்லிகார்ஜூன்கார்கே வீட்டில் முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர், டிகே சிவகுமார் தலைமையில் ஆலோசனை நடந்தது. அது போல் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் வீட்டில் முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

மீண்டும் குதிரை பேரம்
கர்நாடக சட்ட சபை தேர்தலில் பாஜ, காங்., கட்சி தலைவர்கள் தங்களுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என அதிரடியாக கூறி வருகின்றனர். மஜத தலைவர் சிஎம் இப்ராஹிம் இந்த தேர்தலில் தாங்கள் தான் கிங் மேக்கர் என கூறியுள்ளார். எனவே, கர்நாடக சட்ட சபை தேர்தலில் ஒருவேளை எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டால் குதிரை பேரத்திற்கும் பாஜ தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக மஜத வேட்பாளர்கள் அனைவருக்கும் முன்னாள் முதல்வர் குமாரசாமி ரகசிய உத்தரவிட்டுள்ளார் எனவும் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தனியாக ஒரு ரிசார்ட்டில் அவர்களை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளார். அது போல் காங்கிரஸ் மற்றும் பாஜவும் நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* மொத்தம் 224 தொகுதிகளில் 113 தொகுதிகளை வெல்லும் கட்சியே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும்.
* கடந்த 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜ 104, காங்கிரஸ் 78, மதஜ 37 இடங்களை கைப்பற்றின.
* பெரும்பான்மை பலம் கிடைக்காததால் காங்கிரஸ், மஜத இணைந்து ஆட்சி அமைத்தன. பின்னர் சில எம்எல்ஏக்கள் கட்சி தாவியதால், 2019ல் பாஜ 120 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்றியது.

The post கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது யார்? இன்று காலை 10 மணிக்கு முடிவு தெரியும்: தொங்கு சட்டசபை அமைந்தால் குமாரசாமி ஆதரவை பெற காங்., பாஜ முயற்சி appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Paja ,Kumarasamy ,Bengaluru ,Karnataka State Legislation elections ,Kumarasami ,Gang. ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…