×

தமிழ்நாட்டில் கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு வராது: நீர்வளத்துறை அதிகாரி தகவல்

சென்னை: கோடை வெயில் காரணமாக முக்கிய நீர்நிலைகளில் தண்ணீர் குறைவதும், வறண்டு போவதும், இதனால் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதும் இயல்பானது. இதனிடையே அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் கடந்த 4ம் தேதி தொடங்கியது. வருகிற 29ம் தேதி வரை கத்திரி வெயில் நீடிக்கும். எனினும், கடந்த ஒரு வாரத்துக்கு முன்னதாகவே தமிழகத்தில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த 8 நாளில் மட்டும் 114% அதிகமாக மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை இயல்பைவிட அதிகமாகவே பொழிந்தது. இதனால், கோடைகாலம் தொடங்கினாலும் முக்கிய நீர் நிலைகளில் தண்ணீர் மட்டம் அதிகரித்திருந்தது. தமிழ்நாடு நீர்வளத்துறைக் கட்டுப்பாட்டில் 90 நீர்த்தேக்கங்கள் உள்ளன. இதில் மேட்டூர், முல்லைப் பெரியாறு, பவானிசாகர் உள்ளிட்ட அணைகளின் மொத்த கொள்ளளவு 224 டிஎம்சி. ஆனால், தமிழ்நாட்டில் 11ம் தேதி (நேற்று முன்தினம்) நிலவரப்படி 121.144 டிஎம்சி இருப்பில் உள்ளது. எனினும், அணைகளின் நீர் இருப்பை மட்டும் நம்பி இருக்காமல் மாற்று ஏற்பாடுகளை நீர்வளத்துறை எடுத்து வருகிறது.

அதாவது, சென்னை குடிநீருக்கு முக்கிய நீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளின் கொள்ளளவு 13.213 டிஎம்சி. அதில், தற்போது வரை 7.749 டிஎம்சி நீர் உள்ளது. இது 58.65 சதவீதம். இவற்றின் மூலம் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்யலாம். மேலும் சென்னைக்கு தினமும் 3 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சென்னையில் வசிப்பவர்கள் நிலத்தடி நீரை எடுப்பதை தவிர்த்து குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீருக்கு மாறியுள்ளனர். இதனால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நீர்வளத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடும் தண்ணீரால் தமிழகத்தில் பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் அணையில் 102 டிஎம்சி தண்ணீர் உள்ளது. தற்போது தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீர் போதுமான அளவு உள்ளது. ஜூன் 22ம் தேதிக்கு முன்பு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என தெரிகிறது. இதுகுறித்து முதல்வர்தான் முடிவு எடுப்பார். இருப்பினும் தமிழ்நாட்டில் தற்போது வரை தண்ணீர் தட்டுப்பாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு விவரம்
நீர்த்தேக்கங்கள் கொள்ளளவு நீர்இருப்பு சதவீதம்
மேட்டூர் 120 அடி 103.31 அடி 74.03
பவானிசாகர் 105அடி 83.38அடி 53.49
குண்டாறு 36.10அடி 22 அடி 16.98
கெலவரப்பள்ளி 44.30அடி 42.64அடி 96.75
மோர்தானா 37.73அடி 37.72அடி 100
பேச்சிப்பாறை 48அடி 38.20அடி 68.21
வைகை 71அடி 52அடி 39.55

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு
நீர்த்தேக்கங்கள் கொள்ளளவு நீர்இருப்பு டிஎம்சி சதவீதம்
பூண்டி 35 அடி 26.19 அடி 1.017 31.48
சோழவரம் 18.86அடி 16.20 அடி 0.758 69.66
புழல் 21.20அடி 17.28அடி 2.461 74.58
செம்பரம்பாக்கம் 24அடி 19.99அடி 2.601 71.36
வீராணம் 15.60 அடி 10.80அடி 0.458 31.26
தேர்வாய்கண்டிகை 36.61அடி 35.72அடி 0.468 93.60

The post தமிழ்நாட்டில் கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு வராது: நீர்வளத்துறை அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Water Resources Department ,Chennai ,
× RELATED தேர்தல் முடிந்து விதிமுறைகள்...