×

குளச்சலில் நெத்திலி மீன் சீசன் தொடக்கம்: போதிய விலை கிடைக்காததால் மீனவர்கள் கவலை

குளச்சல்: குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 விசைப்படகுகளும், 1000 க்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டுமரங்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள்வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம். விசைப்படகுகள், வள்ளங்கள் அருகில் மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். இதனால் கட்டுமரங்கள் காலை மீன் பிடிக்க சென்று மதியத்திற்குள் கரை திரும்பிவிடும். வழக்கம்போல் கட்டுமரங்கள் தொழில் செய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் முதல் குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்று கரை திரும்பிய விசைப்படகுகள் மீண்டும் கடலுக்கு செல்லவில்லை.

அவை குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. காற்று காரணமாக பைபர் வள்ளங்கள், கட்டுமரங்களும் மீன்பிடிக்க செல்லவில்லை. இவை மணற்பரப்பில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில வள்ளங்களே மீன் பிடிக்க சென்றன. அவற்றுள் போதிய மீன்கள் கிடைக்கவில்லை. பெரும்பான்மையான வள்ளங்கள் மீன் பிடிக்க செல்லாததால் குளச்சலில் மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது.

இந்தநிலையில் இன்று மீண்டும் மீன் பிடிக்க சென்ற கட்டுமரங்களில் நெத்திலி மீன்கள் கிடைத்தன. மீனவர்கள் அவற்றை கரை சேர்த்து விற்பனை செய்தனர்.ஒரு குட்டை நெத்திலி மீன் ரூ.600 முதல் ரூ.800 வரை விலை போனது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த மீன் தலா குட்டை ரூ..1200 முதல் ரூ..1800 வரை விலை போனது என்பது குறிப்பிடத்தக்கது. குளச்சலில் இன்று நெத்திலி மீன் சீசன் தொடங்கியும் போதிய விலை கிடைக்காததால் கட்டுமர மீனவர்கள் கவலையடைந்தனர்.

The post குளச்சலில் நெத்திலி மீன் சீசன் தொடக்கம்: போதிய விலை கிடைக்காததால் மீனவர்கள் கவலை appeared first on Dinakaran.

Tags : Kulachal ,Dinakaran ,
× RELATED குளச்சல் அருகே நிலபுரோக்கர் வீட்டில் திருடிய வாலிபர் கைது 3 பேருக்கு வலை