×

கலை வழியாக என் அடையாளத்தை வெளிப்படுத்தினேன்!

நன்றி குங்குமம் தோழி

அரங்கக் கலைஞர் ரேவதி

எழுத்தாளர், அரங்கக் கலைஞர், மேடை பேச்சாளர், சமூக செயற்பாட்டாளர் என பல்வேறு பரிமாணங்களை தொடர்ந்து வெளிப்படுத்தி வருபவர் திருநங்கை ரேவதி. மாற்றுப் பாலினத்தவர் குறித்து இவர் தமிழில் எழுதி வெளியிட்டுள்ள புத்தகங்கள் “உணர்வும் உருவமும்” மற்றும் “வெள்ளை மொழி”. சமூகச் செயற்பாட்டாளராக தான் மாறியதையும், தற்போதைய தன் நிலை குறித்தும் ரேவதி தமிழில் பகிர்ந்ததை, நந்தினி முரளி ஆங்கிலத்தில் எழுதி வெளியான புத்தகம் ‘‘A Life in Trans Activism.’’ அரங்கக் கலைஞர் ரேவதியிடம் பேசியதில்…

‘‘கலை மட்டுமே வெகு விரைவில் நமது கருத்துக்களை அடுத்தவர் மனதில் விதைக்கும்’’ என்றவர், ‘‘நாடகத்தின் மூலமாகவே மாற்றங்களும் ஏற்பட்டிருப்பதாக நினைக்கிறேன். ஆரம்ப நிலையில், என்னோட பெண்மையை பெண் வேடமணிந்து நாடகங்கள் மூலமாகவே வெளிப்படுத்தினேன். “ஊருக்குத்தான் நான் போடுவது வேஷம். ஆனால் அதுவே எனக்கான அடையாளம்” என்றவரிடத்தில், அவரின் ஆரம்பகட்டம் குறித்து கேட்டபோது…

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு சின்ன கிராமத்தில் 3 அண்ணன் மற்றும் ஒரு அக்காவிற்கு பிறகு கடைசி மகனாகப் பிறந்தவருக்கு பெற்றோர் வைத்த பெயர் துரைசாமி. குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு உடல் அமைப்பு ஆணாகவும், உள்ளுணர்வுகள் பெண்மைக்குரியதாக இருப்பதை உணர்ந்து, “எனக்கு மட்டும்தான் இப்படியா” என்கிற குழப்ப நிலையில் நாட்களை நகர்த்தியதைக் குறிப்பிட்டவர், தான் பத்தாவது படித்துவந்த நிலையில், “நான் யார் என்கிற குழப்பம் என்னை தொலைத்துக்கொண்டே இருந்தது” என்கிறார்.

பாலின குளறுபடிகளின் காரணமாக, கல்வியை தொடர முடியாத அளவுக்கு சுற்றி இருந்தவர்களின் கேலி கிண்டலுக்கு ஆளானவர். நான் பெண்ணாக மாறுவதற்கான போராட்டம் வலிகள் நிறைந்தது எனக் குறிப்பிட்டு, என்னோட பாலியல் வெட்கையும், பெண்ணாக உடை அணிய வேண்டும் என்கிற எனது தணியாத தாகமும், சுதந்திரம் கிடைக்கும் இடம் நோக்கி என்னை நகர்த்தியது. இதுவே என்னுடைய சமுதாயத்தோடு நான் இணைந்த தருணம். தொடர்ந்து டெல்லி, மும்பை, மீண்டும் நாமக்கல் என தன் வாழ்க்கை திசைமாறியதை, பழைய நினைவுகளில் மூழ்கி மனதில் அசை போட்டவராய் மேலும் பேச ஆரம்பித்தார்.

‘‘நான் பெண்ணாக வாழ மிகப்பெரிய போராட்டங்களை சந்தித்த நிலையில், மற்ற ஆண்-பெண் மாதிரி ஏன் நம்மால் அலுவலகம் சென்று வேலை செய்ய முடியவில்லை என்கிற கேள்வி எனக்குள்ளும் இருந்தது. பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு, பெங்களூரில் உள்ள சங்கமா அமைப்பில் அலுவலக உதவியாளராக இணைந்து, அங்கு அனைத்தையும் கற்று போராட்டக் களங்களிலும் நின்றேன். அமைப்பின் வழியே மாற்றுப் பாலினத்தவரின் பிரச்னைகளுக்கும் கரம் நீட்டிக்கொண்டு இருந்த நேரம் அது. சங்கமாவில் இருந்த நூலகத்தில், தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்து வெளிநாட்டவர் எழுதிய ஆங்கிலப் புத்தகங்கள் மட்டுமே அதிகம் இருந்ததை கவனித்தேன்.

திருநங்கைகள் குறித்த புத்தகம் தமிழில் அவ்வளவாக இல்லை என்பதை உணர்ந்து, திருநங்கைகள் குறித்த புரிதலை பொதுவெளி சமூகத்திற்கு ஏற்படுத்த வேண்டுமெனவும் நினைத்தேன். நம்முடைய வாழ்க்கை குறித்து நாம் சொல்வதற்கும் அதை அடுத்தவர்கள் எழுதுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பதை மனதில் இறுத்தி, 2005ல் நான் எழுதிய முதல் புத்தகம் “உணர்வும் உருவமும்”.

ஒட்டுமொத்த திருநங்கைகளில் ஒரு சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் கதையினை இதில் கொண்டுவந்து ஒரு நூலாகத் தொகுத்தேன். “உணர்வும் உருவமும்” நூலுக்காக 2006ல் கனடா நாட்டின் “தமிழ் இலக்கியத் தோட்டம்” எனக்கு விருது கொடுத்து என்னை கௌரவப்படுத்தியது. தொடர்ந்து என்னுடைய தன் வரலாற்றுப் புத்தகமான (autobiography) “வெள்ளை மொழி” புத்தகத்தை 2010ல் எழுதினேன். மாற்றுப் பாலினத்தவர் குறித்த நிறைய கேள்விகளும், தவறான புரிதல்களும் சமூகத்தில் இருந்த நிலையில், சரியான புரிதலை ஏற்படுத்துவதற்காகவும், சமூக மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகவும் என்னால் எழுதப்பட்டதே இந்த இரண்டு புத்தகங்களும்’’ என்றார்.

அரங்கக் கலைஞராக நாடகங்களில் நடிப்பது குறித்து ரேவதியிடம் கேட்டபோது… ‘‘என்னுடைய எழுத்துக்கள் புத்தகமாக வெளிவந்த பிறகு கனட மொழியில் உள்ள அரங்குக் கலைஞர்கள் (theatre artists) என்னுடைய “வெள்ளை மொழி” புத்தகத்தை நாடகமாக மேடை ஏற்றினர். அவர்களுடன் இணைந்து என்னுடைய கதாபாத்திரத்தை நானே நடித்தேன். இதுதான் நாடக நடிகராக நான் மேடை ஏறுவதற்கு முதல் படியாக அமைந்தது. 2013ல் தொடங்கி மூன்று ஆண்டுகள்வரை நான் அவர்களோடுதான் பயணித்தேன்.

பெங்களூரைவிட்டு வந்த பிறகே வெள்ளை மொழியை ஓரங்க நாடகமாக (Solo performance) வெளிப்படுத்தி வருகிறேன். இது எனக்கான பொழுதுபோக்கு விஷயமல்ல… கலை வழியாக நான் என்னுடைய சமுதாயம் குறித்து பொது ஜனங்களுக்கு கற்பித்துக் கொண்டே இருக்கிறேன். அதற்கான ஆயுதமாக மேடைகளை பயன்படுத்தி வருகிறேன். அதனால்தான் தொடர்ந்து இதில் பயணிக்கிறேன்.

தமிழில் இதுவரை 75 முறை மேடை ஏற்றி நாடகத்தை காட்சிப்படுத்தி இருக்கிறேன். கனட மொழியிலும் என் நாடகம் 95 முறை மேடை ஏற்றப்பட்டிருக்கிறது. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கும் “வெள்ளை மொழி” நூலை நாடகமாகக் கொண்டு சென்றேன். மாணவர்களுக்கு ஒரு விஷயத்தை கலையாக நாடக வடிவில் கொடுப்பது மிகவும் சுலபமானதாக இருக்கிறது. கலை மாணவர்களின் மனதை தொடுகிறது. நாடகம் முடிந்ததுமே மாணவர்கள் தங்களின் கேள்விகளை என்னிடம் முன் வைக்கிறார்கள். மாணவர்களுக்கும் எனக்கும் இடையில் அறிவுப்பூர்வமான விவாதங்கள் நடைபெறுகிறது.

என்னுடைய நோக்கம் வளரக்கூடிய தலைமுறையினரிடம் பாலினப் புரிதலை கொண்டுவருவதும், மாற்றுப் பாலினத்தவர் குறித்த புரிதலை விதைப்பதுமே. மாற்றம் என்பது மெல்ல மெல்லத்தான் வரும். வரும் தலைமுறை மாற்றுப் பாலினத்தவர் தங்களின் குடும்பத்தோடு வாழணும். குடும்பம் அவர்களை ஏற்றுக் கொள்ளணும். நான் நாடகம் வழியாக அந்த விழிப்புணர்வை கொண்டு வருகிறேன்’’ என தனது எண்ணத்தை மிகவும் அழுத்தமாகவே பதிவு செய்தவர், தனது புத்தகங்கள் மாணவர்களின் ஆய்வுக்காக கல்லூரி நூலகங்களில் இடம் பெற்றிருப்பதையும் இங்கு குறிப்பிடுகிறார்.

இன்றைய தலைமுறையிடம் என்ன மாற்றங்களை உணர்கிறீர்கள் என்ற கேள்விக்கு… ‘‘திருநங்கைகளிடம் பேசினாலே நம்மை கடத்திட்டு போயிடுவாங்க என எங்களை பயந்து பார்த்த காலம், ஒதுங்கிப்போன காலம் இப்போது மாறியிருக்கிறது. எங்களைப் பற்றிய புரிதல்களும், சக மனிதர்களாகப் பார்க்க வேண்டும் என்கிற பார்வையும் இந்தக் காலத்து மாணவர்களிடம் நிறையவே வந்திருக்கிறது. என் நாடகம் முடிந்ததும் என்னைக் கட்டி அணைத்து மாணவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். என்னிடத்தில் ஆட்டோகிராஃப் வாங்குகிறார்கள். என்னோடு இணைந்து புகைப்படங்களை எடுத்துக்கொள்கிறார்கள். இந்த மாற்றங்கள் வரவேற்க வேண்டிய ஒன்று.

ஊடகங்களும் தொடர்ந்து இதற்கான விழிப்புணர்வை வழங்கி வருகின்றன. இன்னும் முழுமையான மாற்றங்கள் வரவேண்டும்’’ என்றார்.மிகச் சமீபத்தில் இவர் சென்றுவந்த அமெரிக்க நாட்டுப் பயணம் குறித்தும், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள பட்லர் நூலகத்தில்(butler library) எழுத்தாளர் ரேவதியின் பெயர் இடம்பெற்றிருப்பது குறித்து கேட்டபோது… ‘‘வட அமெரிக்காவில் உள்ள ஃபெட்னா பெடரேஷன் (Fetna Federation of Tamil Sangam) மூலமாகவே சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்தேன்.

அமெரிக்காவில் உள்ள ‘கொலம்பியா’‘ பல்கலைக்கழகத்தின் ‘பட்லர்’ நூலகத்தின் (Butler Library) முன் பக்கச் சுவற்றில் அரிஸ்டாட்டில், பிளேட்டோ, ஹோமர் என ஆண் எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்களின் பெயர்கள் பெரிய அளவில் இடம்பெற்றிருக்கும். அதில் பெண்ணுரிமை, பாலின சமத்துவத்தைப் போற்றும் பெண் எழுத்தாளர்களின் பெயர்கள் என்கிற வரிசையில் மாயா ஏஞ்சலோ, குளோரியா அன்சால்டுவா, டயானா சாங், சோரா நீல் ஹர்ஸ்டன், டோனி மாரிசன், லெஸ்லி மார்மன் சில்கோ, ஷாங்கே உள்ளிட்ட எழுத்தாளர்களோடு ஒரு தமிழச்சியாக, மாற்றுப் பாலினத்தவருக்கான எழுத்தாளராக என்னுடைய பெயரும் ‘Revathi’ என அவர்களுடன் பதிக்கப்பட்டுள்ளது. எனது பெயரை பட்லர் நூலக முகப்பில் பார்த்துவிட்டு, மகிழ்ச்சியோடு புகைப்படங்களையும் எடுத்து வந்தேன். எனது புத்தகங்களும் அந்த நூலகத்தில் ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நியூஜெர்ஸியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் (Princeton University) என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். பாஸ்டனில் உள்ள பிரான்டெய்ஸ் பல்கலைக்கழகத்திலும் (Brandeis University) என்னை அழைத்து, வெள்ளை மொழி நாடகத்தை அரங்கேற்றினார்கள். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை மாணவர்களோடு, தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக உடையணிந்து வெள்ளை மொழி நாடகம் குறித்து கலந்துரையாடல் ஒன்றினையும் மாணவர்களோடு நடத்தினேன். கலிபோர்னியாவில் உள்ள தமிழ் சங்கத்தின் முன்னெடுப்பிலும் என்னுடைய வெள்ளை மொழி நாடகம் அரங்கேறியது.’’

வெளிநாடுகளில் வாழும் மாற்றுப் பாலினத்தவருக்கும் நமது நாட்டில் இருக்கிற மாற்றுப் பாலினத்தவருக்கும் என்ன வித்தியாசத்தை உணர்ந்தீர்கள் என்றபோது… ‘‘வெளிநாடுகளிலும் மாற்றுப் பாலினத்தவரை சட்டப்படி அரசாங்கம் ஏற்றுக் கொண்டாலும் பாலின பாகுபாடு, குடும்பங்கள் ஏற்றுக்கொள்ளாமை அங்கும் இருக்கின்றது. ஆனால் நமது நாட்டைவிட சற்று கூடுதலான சுதந்திரம் அவர்களுக்கு உள்ளது.

கல்வி கற்பதற்காக சேரும்போதே, தங்கள் பாலினத்தை எவ்வாறு அடையாளப்படுத்த விரும்புகிறார்கள் என்பதற்கான காலம் விண்ணப்பத்தில் இருக்கும். மாற்றுப்பாலினத்தவரை பாலின பாகுபாட்டுடன் நேரடியாக அணுகினால் அபராதங்கள் விதிக்கப்பட்டு நீதிமன்றத்தில் தண்டனையும் வழங்கப்படுகிறது. அந்த அளவுக்கு சட்டம் மாற்றுப் பாலினத்தவருக்கு சாதகமாகவே இருக்கிறது.’’

தங்களின் “நூரம்மாள் பிரியாணி தர்பார்” நாடகம் குறித்தும் சொல்லுங்கள் என்றதற்கு, ‘‘கோயம்புத்தூரில் மாற்றுப் பாலின மக்கள்தான் அதிகமாக பிரியாணி தயாரிக்கிறார்கள். அவர்களின் தாயரிப்புக்கென பிரியாணியில் ஒரு தனி மணம் இருக்கிறது. வீட்டு விசேஷங்களில் சமையல் வேலை செய்ய அவர்களை மீண்டும் மீண்டும் அழைப்பார்கள். அந்தக் கதைதான் நூரம்மாள் பிரியாணி தர்பார்.

நாடகத்தில் நான் நூரம்மாளாக தோன்றி நடித்து வருகிறேன். வயது மூப்பின் காரணமாய் மிகச் சமீபத்தில் இறந்த 95 வயது நிறைந்த நூரம்மாள் அவர்களின் வாழ்க்கை கதைதான் இந்த நாடகம். அத்துடன் இந்தியாவில் உள்ள உணவு அரசியல் குறித்தும் நாடகம் பேசுகிறது. பிரியாணி தயாரிப்பு கோயம்புத்தூருக்கு எப்படி வந்தது? எத்தனை தலைமுறையாக பிரியாணி சமைத்துக்கொண்டிருக்கிறார்கள்? பிரியாணி தயாரிப்பில் முதல் தலைமுறை யார்? பிரியாணியினை எப்படி அவர்கள் தயாரித்தார்கள் போன்றவை நாடகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.’’

ரேவதி அம்மாவின் குடும்பம் குறித்து கேட்டபோது… ‘‘இன்றைய திருநர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரங்கள்கூட இல்லாத 70, 80களின் காலம் அது. எத்தனை வலிகள்… எத்தனை அவமானங்கள்… எத்தனை சுமைகள்… என்னுடைய 16 வயதில் இருந்து பெற்றவர்களின் உதவியின்றி சுயமாக வாழ்ந்து, இதுதான் நான் என்பதை என் குடும்பத்தில் உள்ளவர்களுக்குப் புரியவைத்திருக்கிறேன்.

இதற்காக பல அவமானங்களையும், போராட்டங்களையும் குடும்பத்தில் உள்ளவர்களிடத்தில் நிறையவே சந்தித்திருக்கிறேன். என்னுடைய இந்த நீண்ட நெடிய பயணத்தில் இப்போது நான் எனது குடும்பத்தோடுதான் இருக்கிறேன். நமது குடும்பத்தில் ஒரு விஷயத்தை புரியவைக்க முடியவில்லை என்றால், இந்த சமூகத்தில் என்ன மாற்றத்தை புரியவைத்து கொண்டுவந்துவிட முடியும்’’ என்றவர், ‘‘எனது உடம்பில் தெம்பு இருக்கும் வரை இந்தப் பயணம் தொடரும்’’ என்றவாறு விடைபெற்றார்.

தொகுப்பு : மகேஸ்வரி நாகராஜன்

The post கலை வழியாக என் அடையாளத்தை வெளிப்படுத்தினேன்! appeared first on Dinakaran.

Tags : Kunkumum Krishna ,Arena ,Ravati ,
× RELATED ஸ்டொய்னிஸ் 124, கெய்க்வாட் 108* ரன் விளாசல் வீண்: சென்னையை வீழ்த்தியது லக்னோ