×

நேற்றைய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த மறுப்பதால் ஒன்றிய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: டெல்லி அரசு அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி: டெல்லியில் தற்போது முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி நிர்வாகம் தொடர்பாக அரசுக்கும், டெல்லி துணைநிலை ஆளுநருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வந்தன. இதுதொடர்பாக 2015-ல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு வழக்குத் தொடர்ந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், 2016ல் ஆளுநருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, ஆம் ஆத்மி அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இரு நீதிபதிகள் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கிய நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதன்படி, தலைமை நீதிபதி சந்திர சூட், நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி, ஹிமா கோலி, நரசிம்மா அமர்வு வழக்கை விசாரித்தது. இதற்கிடையில், 2021ல் ‘தேசிய தலைநகர் பிரதேச டெல்லி அரசு திருத்தச் சட்டம்’ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

புதிய சட்டத் திருத்தத்தின்படி, டெல்லி அரசு எந்த முடிவு எடுத்தாலும், துணை நிலை ஆளுநரின் கருத்தைக் கேட்டறிவது கட்டாயமாக்கப்பட்டது. இதன் பிறகு அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கும்கூட, துணைநிலை ஆளுநரின் அனுமதியைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், ‘நாட்டின் இதர யூனியன் பிரதேசங்களுக்கும், டெல்லிக்கும் வித்தியாசம் இருக்கிறது. டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லாமல் இருக்கலாம்.

ஆனால், சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது. பொது ஒழுங்கு, காவல் துறை, நிலம் உள்ளிட்ட விவகாரங்களைத் தவிர்த்து, இதர அனைத்து அதிகாரங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே உள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள், அவரவர் துறை சார்ந்த அமைச்சர்களுக் குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். டெல்லி துணைநிலை ஆளுநரைவிட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழு அதிகாரமும் உள்ளது. டெல்லி அரசின் அறிவுரைப்படியே துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும்’ என்று கூறியது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால், நேற்று முதல் டெல்லி அரசு துரித நடவடிக்கையில் இறங்கியது. கடந்த 8 ஆண்டுகளாக தகுதி, திறமையின் அடிப்படையில் அதிகாரிகள் பதவி உயர்வு, இடமாற்றம் ெதாடர்பான நிலுவை விண்ணப்பங்களுக்கான ஒப்புதலை வழங்குமாறு ஒன்றிய அரசுக்கு கடிதம் வைத்தது. ஆனால் ஒன்றிய அரசு அதற்கான அனுமதியை தரவில்லை.

அதையடுத்து இன்று உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசு, ஒன்றிய அரசின் மீதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதில், ‘டெல்லி அரசின் அதிகாரிகள், செயலாளர்கள் மாற்றம் தொடர்பான நிர்வாக ஒப்புதல் வழங்க ஒன்றிய அரசு மறுக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முட்டுக் கட்டையாக உள்ளது. இது நேற்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மற்றும் அவமதிக்கும் வகையில் உள்ளது. எனவே டெல்லி அரசு பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்த அனுமதி வழங்க வேண்டும். இதற்காக ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது. இம்மனு மீதான விசாரணை விரைவில் பட்டியலிடப்படும் என்றும், நேற்றைய தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post நேற்றைய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த மறுப்பதால் ஒன்றிய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: டெல்லி அரசு அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Union government ,Supreme Court ,Delhi government ,New Delhi ,Aam Aadmi Party ,Chief Minister ,Arvind Kejriwal ,Delhi ,Dinakaran ,
× RELATED தேச துரோக வழக்கு: ஒன்றிய அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்