×

ராஜபாளையம் வட்டார கிராமங்களில் நெல் பயிரில் இலை கருகல் நோய்

*வேளாண்துறையினர் ஆய்வு

ராஜபாளையம் : ராஜபாளையம் வட்டாரத்தில் உள்ள வயல்களில் ஆய்வு செய்த வேளாண்துறையினர், நெல்லில் பாக்டீரியா இலை கருகல் நோய் இருப்பதை கண்டறிந்தனர். இதனை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.ராஜபாளையம் வட்டாரத்தில் சேத்தூர், தேவதானம், முத்துச்சரம், மேட்டுப்பட்டி ஆகிய கிராமங்களில் வேளாண்மை துணை இயக்குனர்(விதை ஆய்வு) வனஜா, பருத்தி ஆராய்ச்சி நிலையம் பேராசிரியர் டாக்டர் விமலா, ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் திருமலைச்சாமி ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் நெல்லில் பாக்டீரியா இலை கருகல் நோய் இருப்பதை கண்டறிந்தனர்.

இது குறித்து வேளாண்துறையினர் கூறுகையில்,‘‘வளர்ந்த செடிகளில் இலை ஓரத்தின் அருகே ஒளிஊடுருவக்கூடிய புள்ளிகள் தோன்றும். புள்ளிகளின் நீளம் மற்றும் அகலம் ஆகிய இரண்டிலும் அலை அலையான விளிம்புடன் பெரிதாகி, சில நாட்களுக்குள் வைக்கோல் மஞ்சள் நிறமாக மாறி, இலை முழுவதையும் மூடும். நோய் அதிகரிக்கும் போது இலைகள் வெள்ளை அல்லது வைக்கோல் நிறமாக மாறும். பாதிக்கப்பட்ட தானியங்கள் நிறமாற்றம் செய்யப்பட்ட புள்ளிகளைக் கொண்டிருக்கும்.

நடவு செய்யும் போது நாற்றின் நுனியை வெட்டுதல், கனமழை, கடும் பனி, ஆழமான பாசன நீர், கடுமையான காற்று மற்றும் வெப்பநிலை 25-30 சி, அதிகப்படியான நைட்ரஜனை பயன்படுத்துதல், குறிப்பாக காலம் தாழ்த்தி மேல் உரமிடுதல் ஆகியவற்றினால் நெல்லில் பாக்டீரியா இலை கருகல் நோய் நோய் தென்படுகிறது.பாக்டீரியா இலை கருகல் நோயை கட்டுப்படுத்த நைட்ரஜன் உரத்தை அளவாக பயன்படுத்த வேண்டும். ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட்+டெட்ராசைக்ஜின்-120 கிராம்+காப்பர் ஆக்ஸி குளோரைடு-500 கிராம் என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும். விவசாயிகள் இதனை பயன்படுத்தி நெல்லில் நோயை கட்டுப்படுத்தலாம்’’ என்று தெரிவித்தனர்.

The post ராஜபாளையம் வட்டார கிராமங்களில் நெல் பயிரில் இலை கருகல் நோய் appeared first on Dinakaran.

Tags : Rajapalayam district ,Rajapalayam ,Dinakaran ,
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...