×

ங போல் வளை… யோகம் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜி

தடைகளைக் கையாளுதல்

எந்த ஒரு செயலிலும் தடைகள் வந்ததும், தளர்ந்து விடுவதும், மேற்கொண்டு அந்த செயலைச் செய்வதை விட்டுவிடுவதும் மனித இயல்பு. இதிலிருந்து நாம் அனைவருமே
எப்போதேனும் மீண்டு எழுந்து விடுகிறோம் அல்லது நிரந்தரமாக ஒன்றை கைவிட்டு விடுகிறோம்.

சிறு வயதில் ஆர்வத்துடன் இசை கற்கச் செல்கிறோம் அல்லது நமது குழந்தைகளை இசைக்குப் பயிற்றுவிக்கிறோம். ஆனால், ஒரு கட்டத்தில் ஆர்வமிழக்கிறோம். பின் எப்போதைக்குமென இசையைக் கைவிடுகிறோம். இப்படி பல வகையான கற்றலை மறக்கிறோம். இதற்கு நாம் பல்வேறு காரணங்களைக் கற்பித்துக்கொண்டு, சமாதானமடைகிறோம்.

ஆனால், ஏன் நாம் ஒன்றைத் தொடர்ந்து செய்வதில்லை. சலிப்புறுகிறோம் என்பதையும், அதிலிருந்து மீள்வதையும் ஒவ்வொரு துறையிலும் சாதனை நிகழ்த்தியவர்கள் , சொல்வதை நாம் கூர்ந்து கேட்கவேண்டியுள்ளது. அவற்றை அறிவுரை என்றோ, என்ன புதிதாக சொல்லிவிடப்போகிறார்கள்? என்றோ புறந்தள்ள வேண்டியதில்லை. ஏனெனில், இந்த உடலும் மனதும் விரைவில் நலிவுறும் தன்மை கொண்டது. அதற்கு இணையாகவே ஆற்றலை திரட்டி மீட்டுக்கொள்ளும் தன்மையும் கொண்டது.

சாதனையாளர்கள் என்று நாம் சொல்வது தங்களை நலிவுகளிலிருந்து மீட்டுக்கொண்டவர்களைத்தான். உடற்பயிற்சி செய்ய ஒரு வருட சந்தா கட்டி உடற்பயிற்சிக் கூடத்தில் சேருகின்றனர். ஆனால், ஒரு புள்ளிவிவரத்தின்படி அப்படி சந்தா கட்டியவர்களில் இருபது சதவிகிதம் நபர்களே தொடர்ந்து வருகின்றனர். மீதமுள்ளோர் நீச்சல் குளங்களுக்கோ, யோக மையத்துக்கோ சென்று சிலநாட்கள் செலவழிக்கின்றனர். அதுவும் சலித்துவிட , நடைப்பயிற்சி செய்கின்றனர்.

ஆறு மாதத்தில் அனைத்தயும் ஒரு சுற்று முடித்துவிட்டு. சோர்ந்து அமர்ந்து ‘பின்னர் பார்த்துக்கொள்ளலாம்’ எனும் மன மற்றும் உடல்நிலைக்கு வந்து விடுகின்றனர். இந்த நிலை எல்லா துறைகளிலுமே உண்டு. முக்கியமாக நீண்ட காலப் பயிற்சி திட்டங்கள் தோல்வியடைவதற்கும் இதுவே முதன்மைக் காரணி. ஆக இயல்பாக யோகபயிற்சிகளிலும் இது நிகழ்கிறது. இன்று உலகம் முழுவதும் பெரும்பாலானவர்களுக்கு யோகத்தின் பலன்களும், அடிப்படைகளும், சிறிது பயிற்சிகளும் தெரிந்திருந்தும்கூட, அதைத் தொடர முடியாமல் பாதியில் கைவிட்டவர்கள் அநேகம் பேர்.

யோகத் துறையில் முன்னோடிகளும், யோகிகளும், தீவிர சாதகர்களும் இவற்றை எப்படி கையாண்டு, நீண்ட காலப் பயிற்சியாளர்களாக மாறினார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். அவற்றில் ஏதேனும் ஒன்று நம்மை மீண்டும் உந்தித்தள்ளி பயிற்சிகளைத் தொடர உறுதுணையாக அமையும்.OBSTACLES OF SADHANA – எனும்’’ சாதகருக்கான தடைகள்’’ பற்றி முக்கியமான யோகியர் சுவாமி சிவானந்த சரஸ்வதி , சத்யானந்த சரஸ்வதி, சுவாமி நிரஞ்சனானந்த சரஸ்வதி, திருமலை கிருஷ்ணமாச்சாரி, பி கே எஸ் அய்யங்கார் போன்ற மாபெரும் ஆளுமைகள் அனைவரும் பேசியிருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரின் கருத்துக்களில் இருந்து முக்கியமான சிலவற்றை இங்கே காணலாம்.முதலில், ஒரு பயிற்சித் திட்டம் நமக்கு ஏதேனும் வகையில் பலன் அளிக்கிறதா என்பதை ஒருவர் நிச்சயமாக சுய பரிசோதனை செய்ய வேண்டும். பலனளிக்காத ஒன்றை தொடரக் கூடாது அல்லது அதைத் தொடர உடலும் உள்ளமும் தயாராக இல்லை எனலாம். சுய பரிசோதனை என்பது, நீங்கள் உங்களுக்கான ஒரு யோக பாடத் திட்டத்தை கண்டறிந்து ஆசிரியரின் ஆலோசனையுடன் அதைக் குறைந்தது தொண்ணூறு நாட்களுக்காவது பயின்று, அதன் மூலம் கிடைக்கும் அனுபவத்தைக் கொண்டு, பலன் அளித்திருந்தால், மேற்கொண்டு தொடரலாம். பலனளிக்கவில்லை எனில் அதைத் தயக்கமின்றி கைவிட்டுவிட்டு மாற்றுத் திட்டம் ஒன்றைக் கண்டுபிடித்தல் நலம். அடுத்த, இரண்டு தடைகள். ஒன்று வெளிப்புறக் காரணி, இரண்டாவது உட்புறக் காரணி.

வெளிப்புறக் காரணி என்பது சுற்றுச் சூழல், தட்ப வெப்ப நிலை, பக்கத்து வீட்டுக்காரர், நண்பரின் அலைபேசி குறுஞ்செய்தி, குடும்ப உறுப்பினர்கள், பயிற்சிக்கான சரியான இடம் அமையவில்லை, என நூறு புறக்காரணிகள் நமது தொடர் பயிற்சிக்குத் தடைகளாக அமைபவை, இரண்டாவதாக அகக்காரணிகள் எனப்படும், நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் சமாதானங்களும், புறக்கணிப்புகளும். உதாரணமாக, ஏற்கெனவே, நான்கு நாட்கள் பயிற்சி செய்துவிட்டேன். ஆகவே அடுத்த இரண்டு நாட்களுக்கு விடுமுறை விட்டுவிடலாம், என்றோ, சாக்கு போக்குகளைச் சொல்லிக்கொண்டு பயிற்சியை ஒத்திப்போடுதலோ அல்லது மனம் சொல்லும் ஏதேனும் ஒரு காரணியை முன்வைத்து பயிற்சியை கைவிடுதலோ இதில் அடங்கும்.

மேற்சொன்ன இரண்டுவகை காரணிகளிலிருந்தும் வெளிவர ஒருவர் செய்யவேண்டியது ‘கால நிர்ணயம் ‘ செய்து கொள்ளுதல் மட்டுமே. மேலே சொன்னது போல மூன்று மாதத்தில் இருபது முப்பது சதவிகிதமாவது பலனளிக்கவில்லையெனில் அவற்றை மாற்றிவிடலாம். அவை நமக்கானவையல்ல. இப்படி ஒரு குறிப்பிட்ட காலத்தை நிர்ணயித்துக்கொள்ளுதல் மிகவும் முக்கியமானது.அப்படி குறைந்தபட்ச அனுபவமாவது கிடைத்துவிட்டால், அந்தப் பயிற்சிகளை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துக்கொள்ளலாம். இதன் மூலம் ஒரு வருடத்தில் ஆறு மாதங்கள் பயிற்சி செய்தவராக மாறிவிடுவீர்கள்.

ஆறு மாதம் பயிற்சியின் அனுபவத்தை அடைந்த உடலும், மனமும் பின்னர் ஒருபோதும் பயிற்சிகளைக் கைவிடாது. அடுத்ததாக பன்மைத்தன்மை எனப்படும். DIVERSITY அதாவது பள்ளிக்கூடத்தில் ஒரு நாள் வகுப்பு என்பது எப்படி, கணிதம் , வரலாறு , புவியியல் , தாவரவியல், விளையாட்டுப்பயிற்சி என கலந்து உருவாக்கப்பட்டுள்ளதோ,அது போன்ற ஒரு பாடத்திட்டம் நமது பயிற்சியிலும் இருக்க வேண்டும்.

ஆசனப் பயிற்சிகள் செய்து வரும் ஒருவருக்கு மிகக்குறைந்த நாட்களிலேயே சலிப்பு அல்லது ‘போர்’ அடித்துவிடுவது இயல்பு. அல்லது தியானம் மட்டுமே செய்துவரும் ஒருவருக்கும் இதுவே நிலை. ஆகவே, குறைந்தது பன்னிரண்டு பிரத்யேகமான ஆசனங்கள், ஐந்து வகையான பிராணாயாம பயிற்சிகள், மூன்று வகை தியானப் பயிற்சிகள் என ஒரு சரியான பாடத் திட்டம் உங்களிடம் இருக்க வேண்டும்.

சிறிது நாட்கள் ஆசனப் பயிற்சிகளில் சலிப்பு வரும்பொழுது, பிராணாயாம, தியானப் பயிற்சிகளை மட்டும் ஒரு வாரம் தொடரலாம். பின்னர் மீண்டும் ஆசனப் பயிற்சிகளை இணைக்கும்பொழுது பெரிய சுமையாகத் தோன்றாது. மாறாக, ஒரு வாரம் எந்தப் பயிற்சியையும் செய்யாமல் விட்டுவிட்டு மீண்டும் செய்ய தொடங்குகையில், சலிப்பே மிஞ்சும். இதை சுவாமி நிரஞ்சனானந்த சரஸ்வதி அவர்கள் மிகச் சிறிய ‘யோக கேப்சூல்’ எனும் முறையில் வடிவமைத்திருக்கிறார். அதில் நாற்பது நிமிடங்கள் செய்யக்கூடிய தினசரி பயிற்சிகளின் செறிவான பாடத் திட்டம் ஒன்று இருக்கிறது. அதை முன் மாதிரியாக வைத்து உங்களுக்கான பன்முகத்தன்மை கொண்ட ஒரு கையேட்டை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

மேலும் இந்த நூற்றாண்டின் இணையற்ற யோகியரில் ஒருவரான, நவீன மருத்துவமும் முழுவதும் கற்ற சுவாமி சிவானந்த சரஸ்வதி , ‘OBSTACLES OF SADHANA’ எனும் கட்டுரையில் முக்கியமாக முன்வைப்பது ‘சிறிதாக தொடங்குங்கள்’ இது குறித்து ‘’Start a little, do a little’’ என கவிதையே எழுதியிருக்கிறார். ஒன்றைச் சிறிதாகத் தொடங்குவதும், அதைத் தொடர்ந்து செய்து வருவதும் மட்டுமே, வெற்றி பெற்ற அனைத்து ஆளுமைகளின் சூத்திரமாக இருந்திருக்கிறது.

காந்தியின் அனைத்துப் போராட்டங்களும் சிறிய அளவில் தொடங்கப்பட்டு.தொடர்ந்து செய்து படிப்படியாக விரிவுகொண்டு, மொத்த தேசத்துக்கும் சென்று சேர்வது என்பது அவருடைய வெற்றியின் முதன்மைக் காரணம்.இதுவே நமது இன்றைய தனிமனிதத் தேவையும்கூட. ஆகவே, பயிற்சிகளை மிகவும் சிறிய அளவில் தொடங்குங்கள், தொடர்ந்து செய்து, படிப்படியாக நேரத்தைக் கூட்டிக்கொண்டே செல்லலாம். யோகப்பயிற்சி என்பது ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் செய்தாலே போதும் என்கிறபடிதான் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, தினசரி அரை மணி நேரம் என ஆரம்பிக்கவும். அதில் பல கூறுகள் உள்ளடங்கிய பாடத்திட்டம் இருக்கட்டும்

அர்த்த தித்தலி ஆசனம்

இந்தப் பகுதியில் நாம் ‘அர்த தித்தலி ஆசனம்’ எனும் பயிற்சியைப் பார்க்கலாம். கால்கள் நீட்டிய நிலையில் அமர்ந்து, ஒரு காலை மடித்து மறு தொடையில் வைத்துக்கொள்ளவும். மூச்சு உள்ளே வரும்பொழுது கால் மூட்டுப் பகுதியை மேல் நோக்கித் தூக்கவும், மூச்சு வெளியே செல்லும் பொழுது தரையை நோக்கி அழுத்தவும். ஒவ்வொரு காலுக்கும் பத்து முறை செய்துவந்தால், மூன்று மாதத்தில் மூட்டுவலி, தொடைகளில் ஏற்படும் இறுக்கம் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும்.

The post ங போல் வளை… யோகம் அறிவோம்! appeared first on Dinakaran.

Tags : Kungumum ,Dr. ,Yoga ,Selandararajan.ji ,
× RELATED நிஷ்கல யோகம் என்னும் புதையல் யோகம்