×

காட்பாடியில் போதை ஒழிப்பு குழுவினர் கலந்தாய்வு கூட்டம் மாணவர்கள், காவல்துறை இணைந்து செயல்பட்டால் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க முடியும்

*ரவுடிகளை எஸ்பிக்கள் கண்காணிப்பதாக ஏடிஜிபி சங்கர் பேச்சு

வேலூர் : வேலூர் சரக காவல்துறை சார்பில் காட்பாடி சன்பீம் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் தமிழக சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி சங்கர் தலைமை தாங்கினார். வடக்கு மண்டல ஐஜி கண்ணன், வேலூர் சரக டிஐஜி முத்துச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபி சங்கர் பேசியதாவது: தமிழ்நாடு முதல்வர் போதை இல்லாத மாநிலமாக உருவாக்கும்படி கூறியுள்ளார். அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்கள் காவல்துறையினர் இணைந்து செயல்பட்டால்தான் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க முடியும். பல்வேறு ஆய்வுகளில் மாணவர்கள் போதைப்பழக்கத்திற்கு ஆளாவது தெரியவந்துள்ளது.

போதைப்பொருளின் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கஞ்சா வேட்டை 1, 2, 3, 4 என்று கஞ்சா வேட்டை நடத்தப்படுகிறது. இதன்மூலம் கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மதுரையில் மட்டும் நேற்று ஒரேநாளில் 2 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள் ‘ஆன்டி டிரக் கமிட்டி’ குழுவை உருவாக்கவேண்டும். பள்ளி அருகே உள்ள கடைகளில் கஞ்சா விற்பது தெரிந்தால் உடனடியாக புகார் தெரிவிக்கவேண்டும்.

கடந்த ஆண்டு 25 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 13 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. போதை பொருட்கள் மீது நாம் போர் தொடுக்க வேண்டும். அப்போதுதான் இளைய சமுதாயத்தினரை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடியும், இவ்வாறு பேசினார். இதையடுத்து மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனர்.

தொடர்ந்து நிருபர்களிடம் ஏடிஜிபி சங்கர் கூறியதாவது: மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்யப்படுகிறது. குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை சம்பவங்கள் எடுத்து, அது எங்கு நடந்துள்ளது என்று கண்காணித்து, அங்கு ரோந்து பணிகளை அதிகரிக்கப்படுகிறது. இ பீட் திட்டம் அமலில் உள்ளது. காட்பாடி மாநில எல்லையில் சோதனைச்சாவடி அமைக்கப்படுகிறது.

ரவுடிசத்தை கட்டுப்படுத்த, அவர்களின் நடவடிக்கைகளை டிஎஸ்பி, எஸ்பி போன்ற உயர் அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. கொலை, கஞ்சா, போதை பொருட்கள் தொடர்பான குற்றங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் புதன்கிழமை தோறும், குறைதீர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. போலீசார் சேவையின் தரத்தினை உயர்த்த வேண்டும். குற்றங்கள் எங்கு நடக்கிறதோ? அதனை கணக்கெடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகிறது. முன்பு பட்டா புக் இருந்தது. தற்போது இ பீட் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

கஞ்சாவை தடுக்க மாநில எல்லைகளில் ஸ்கேனர் மூலம் கஞ்சாவை சோதனை நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் நுண்ணறிவு தடுப்பு பிரிவுக்கு மோப்பநாய் மூலமும் கஞ்சா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தலாம். ஏடிஎம் கொள்ளையை தடுக்க வார இறுதிநாட்களான சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்று கிழமை முழுவதும் என்று கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படுகிறது. இவ்வாறு கூறினார்.

இதில் எஸ்பிக்கள் ராஜேஷ் கண்ணன் (வேலூர்), பாலகிருஷ்ணன் (திருப்பத்தூர்), கிரண்ஸ்ருதி (ராணிப்பேட்டை), கார்த்திகேயன் (திருவண்ணாமலை) காவல்துறை நவீன கட்டுப்பாட்டு பிரிவு எஸ்பி தீபாசத்யன் (சென்னை), மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி மற்றும் சன்பீம் பள்ளிகளின் தலைவர் அரிகோபாலன், ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லூரி நிறுவனர் சரவணன் மற்றும் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக போதைக்கு எதிரான விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தினை ஏடிஜிபி சங்கர் தொடங்கி வைத்தார்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

வடக்கு மண்டல ஐஜி கண்ணன் பேசுகையில், ‘போதை பழக்கம் ஒருவரின் எதிர்காலத்தை சீரழிக்கும், சினிமாவில் காட்டுவது போல் ஊசி போடுவதுமட்டுமல்ல, கூல் லிப் போன்றவற்றை பயன்படுத்துவதும் போதை தான். இளைஞர்களை அதிகம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. அதற்கு உடல் ஆரோக்கியமும் இருந்தால் தான் பொருளாதாரத்தில் முன்னேர முடியும். நோயற்ற வாழ்வே குைறவற்ற செல்வம், போதை பொருட்கள் பயன்படுத்தினால் உடல்உறுப்புகள் பாதிக்கும், உங்கள் நண்பர்கள் பயன்படுத்தினாலும் ஆசிரியர்களிடம் கூற வேண்டும், என்றார்.

போதை தடுப்பு பணிகள் தீவிரம்

முன்னதாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில், ‘மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு செய்து வருகிறது. மக்களுக்கு பாதுகாப்பு தருவதிலும் அரசு முனைப்புடன் நடவடிக்கை எடுத்து வருகிறது. போதை பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வருங்கால சமுதாயத்தை பாதுகாக்க போதை தடுப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. அதன்ஒரு பகுதியாகத்தான் போதை தடுப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைவரும் ஒன்றிணைந்து போதை விற்பனையை ஒழிக்க கைகோர்க்க வேண்டும்’ என்றார்.

2 ஆண்டுகளில் 1,156 பேர் கைது

வேலூர் சரக டிஜஜி முத்துசாமி பேசுகையில், ‘ வேலூர் சரகத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையையொட்டி 494 பள்ளிகளில் ஆன்டி டிரக் யூனிட் தொடங்கப்பட்டுள்ளது. கஞ்சா வேட்டையில் வேலூர் சரகத்தில் 4.0 வேட்டை வரையில் நடத்தப்பட்டுள்ளது. கடந்த அண்டு 643 வழக்குகள் பதிந்து 798 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தாண்டு தற்போது வரையில் 278 வழக்கு பதிந்து, 358 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 ஆண்டுகளில் கஞ்சா வழக்கில் 1,156பேர் ைகது செய்யப்பட்டுள்ளனர், என்றார்.

The post காட்பாடியில் போதை ஒழிப்பு குழுவினர் கலந்தாய்வு கூட்டம் மாணவர்கள், காவல்துறை இணைந்து செயல்பட்டால் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க முடியும் appeared first on Dinakaran.

Tags : Kadapadi ,Tamil Nadu ,ATGB ,Sankar ,Vellore ,Kadbadi Sunbeam School ,Sarakha Police ,Canadie Addiction ,Committee ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...