×

அடுத்த சுற்றுக்குள் நுழைவது யார்? வான்கடேயில் மும்பை-குஜராத் மோதல்

மும்பை: ஐ.பி.எல். டி20 தொடரில் இன்றிரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 57-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி 8 வெற்றி, 3 தோல்வி என 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. குஜராத் அணியை பொறுத்தமட்டில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் வலுவாக உள்ளது. அந்த அணியில் ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு வீரர் பொறுப்பேற்று ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து செல்கின்றனர். பேட்டிங்கில் சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, விருத்திமான் சாஹா, விஜய் சங்கர், டேவிட் மில்லர் ஆகியோரும் பந்துவீச்சில் முகமது ஷமி, ரஷித்கான், மொகித் ஷர்மா, நூர் அகமது, அல்ஜாரி ஜோசப்பும் வலுசேர்க்கின்றனர்.

மும்பையை பொறுத்தவரை முந்தைய 2 லீக் போட்டிகளில் ராஜஸ்தான், லக்னோ அணிகளை புரட்டியெடுத்த உற்சாகத்துடன் களமிறங்குகிறது. மும்பை இன்று குஜராத்தை வீழ்த்தினால் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழையும். இதனால் முதல் அணியாக அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைக்க அந்த அணி அதிக ஆர்வம் காட்டும். மும்பை 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. இருப்பினும் ரன்-ரேட்டில் பின்தங்கி இருப்பதால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு சிரமமின்றி தகுதி பெற வேண்டும் என்றால் அடுத்து வரும் ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டியது முக்கியமானதாகும்.

முந்தைய லீக் போட்டியில் மும்பை, பெங்களூருக்கு எதிராக 200 ரன் இலக்கை 21 பந்துகள் மீதம் வைத்து எட்டிப்பிடித்து அசத்தியயது. இந்த தொடரில் மும்பை சேசிங்கில் 4 முறை 200 ரன்களை கடந்து அசத்தியுள்ளது. குஜராத்துக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 55 ரன்கள் வித்தியாசத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க அனைத்து வகையிலும் வரிந்து கட்டும். மும்பை அணியின் பேட்டிங் வரிசை வலுவாக இருந்தாலும், பந்துவீச்சில் பியுஷ் சாவ்லா (17 விக்கெட்), பெரன்டோர்ப் (11 விக்கெட்) தவிர வேறு யாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

பேட்டிங்கில் சூர்யகுமார், இஷான் கிஷன், கேமரூன் கிரீன், காயம் அடைந்த திலக்வர்மாவுக்கு பதிலாக வாய்ப்பு பெற்றுள்ள நேஹல் வதேரா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் ரோகித் சர்மா தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறார். அவர் கடைசி 5 ஆட்டங்களில் 12 ரன்கள் மட்டுமே சேர்த்து இருக்கிறார். இதில் 3 டக்-அவுட்டும் அடங்கும். அவர் இன்று பார்முக்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வலுவான பேட்டிங் வரிசை கொண்ட இரு அணிகள் மல்லுக்கட்டும் இந்த போட்டியில் இன்று ரன் மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.பி.எல். தொடரில் இதுவரை இந்த இரு அணிகளும் 2 முறை நேருக்கு நேர் மோதி தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.

The post அடுத்த சுற்றுக்குள் நுழைவது யார்? வான்கடேயில் மும்பை-குஜராத் மோதல் appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Gujarat ,Wankhede ,IPL ,Gujarat Titans ,Mumbai Indians ,T20I ,Wankhede Stadium ,Dinakaran ,
× RELATED சல்மான்கான் வீடு முன் துப்பாக்கியால்...