×

நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியா? தொங்கு சட்டசபையா? கருத்துக்கணிப்பு முடிவுக்கு மத்தியில் குமாரசாமி திடீர் சிங்கப்பூர் பயணம்

புதுடெல்லி: கர்நாடகாவில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், கருத்து கணிப்பு முடிவுகள் காங்கிரசுக்கு ஆதரவாக வெளியானதால் திடீர் திருப்பமாக மஜத தலைவர் குமாரசாமி, சிங்கப்பூர் விரைந்தார். இதனால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்ற‌து. இதில் 73.19 சதவீதவாக்குகள் பதிவாயின. இந்த தேர்தலில் ஆளும் பாஜக 224, எதிர்க்கட்சியான‌ காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாய சங்கம்), மதச்சார்பற்ற ஜனதா தளம் 207, ஆம் ஆத்மி 217, பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளில் களமிறங்கியுள்ளன. 918 சுயேச்சைகள் உட்பட மொத்தமாக 2613 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிகோன் தொகுதியிலும், முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியிலும், மஜத தலைவர் குமாரசாமி சென்னபட்ணா தொகுதியிலும், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிட்டுள்ளனர்.

காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. 34 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால், மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும், 24 மணி நேரமும் கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நாளை காலை தொடங்குகிறது. 16வது சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது நாளை மாலைக்குள் தெரிந்துவிடும். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் பல்வேறு நிறுவனங்களின் சார்பில் தேர்தல் கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றில் அதாவது 10 கருத்துக் கணிப்புகளில் 7 கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும், பாஜக ஆட்சியை இழக்கும் என்று தெரிவித்துள்ளன.

அதேநேரம் முழு பெரும்பான்மை எண்ணிக்கையில் காங்கிரசுக்கு சீட்கள் கிடைக்குமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளதால், தொங்கு சட்டசபை அமையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவ்வாறு தொங்கு சட்டசபை அமையுமானால் மதசார்பற்ற ஜனதா தளம் (மஜத) கட்சி, யாருக்கு ஆதரவு அளிக்கவுள்ளதோ? அந்த கட்சி தான் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. அதனால் அந்தக் கட்சிக்கு மவுசு அதிகரித்துள்ளது. காங்கிரஸ் – பாஜக கட்சிகளின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில் நேற்று மஜத சட்டமன்றக் கட்சித் தலைவர் எச்.டி.குமாரசாமி, திடீரென சிங்கப்பூர் (மருத்துவ பரிசோதனைக்காக) புறப்பட்டு ெசன்றார். முன்னதாக அவர் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘எனது நிபந்தனைகளை எந்தக் கட்சி நிறைவேற்றுகிறதோ அதைப் பொறுத்து தான் பாஜக அல்லது காங்கிரசுடன் கூட்டணி அமைப்பேன். சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்புகளை பார்க்கும் போது, புதிய அரசு அமைவதில் மஜத-வின் பங்கு அதிகமாக இருக்கவாய்ப்புள்ளது. எங்களது கட்சி 50 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த முறை, எனது நிபந்தனைகளை நிறைவேற்ற ஒப்புக்கொள்ளும் கட்சிக்கு ஆதரவளிப்பேன்’ என்றார். முன்னதாக கடந்த 2006ல் பாஜகவுடனும், 2018ல் காங்கிரசுடனும் கூட்டணி அமைத்து இரண்டு முறை குமாரசாமி முதலமைச்சரானார்.

ஆனால் அவரை தொடர்ந்து ஆட்சி நடத்த கூட்டணி கட்சிகள் விடவில்லை. தற்போதைக்கு குமாரசாமியின் நிபந்தனை என்னவென்றால், அவர் முதல்வராக வேண்டும் என்றும், ஆட்சி அதிகாரித்தில் அவருக்கு சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறார். குறிப்பாக, மஜத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நீர்வளம், மின்சாரம் மற்றும் பொதுப்பணிகள் போன்ற இலாகாக்களை ஒதுக்க வேண்டும் என்றும், அவரது கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற தனது கூட்டணி கட்சி அனுமதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் தேசியத் தலைவர்களுடன் குமாரசாமி மற்றும் அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா ஆகியோர் நல்லுறவில் உள்ளனர். அதனால் நாளைய வாக்கு எண்ணிக்கை முடிவுகள் கர்நாடக அரசியலில் புதிய திருப்பங்களை உருவாக்க வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில் அதாவது 2004, 2008, 2018 ஆகிய ஆண்டுகளில் கூட்டணி அரசு அமைந்தும், அந்த அரசுகள் கவிழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

The post நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியா? தொங்கு சட்டசபையா? கருத்துக்கணிப்பு முடிவுக்கு மத்தியில் குமாரசாமி திடீர் சிங்கப்பூர் பயணம் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Kumarasamy ,Singapore ,New Delhi ,Congress ,Dinakaran ,
× RELATED முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும்,...