×

தரமற்ற உணவு விற்பதாக புகார் எதிரொலி ஓட்டல்களில் திடீர் சோதனை; 15 கிலோ கெட்டுப்போன சிக்கன் பறிமுதல்

ஊட்டி : சுற்றுலா பயணிகளுக்கு தரமற்ற உணவுகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறையினர் ஊட்டியில் ஓட்டல்களில் நடத்திய திடீர் சோதனையில் 15 கிலோ கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்த வண்ணம் உள்ளனர். இதனை தொடர்ந்து ஊட்டி நகரில் உள்ள பெரும்பாலான உணவகங்களில் வழங்கப்படும் உணவு பொருட்களின் தரம் குறைவாக இருப்பதாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் இருந்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்துள்ளது. இப்புகாரின் பேரில் ஊட்டி மட்டுமின்றி நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டு உணவு தரத்தை உறுதி செய்யுமாறு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறைக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் அடிப்படையில் மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகுமார், சிவராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஊட்டி கமர்சியல் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் சுகாதாரமற்ற மற்றும் கெட்டுப்போன சிக்கன் சுமார் 15 கிலோ கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த 6 உணவகங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சுகாதாரமற்ற முறையில் உணவகங்கள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டதை தொடர்ந்து உணவகங்கள் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் கூறுகையில், ‘‘உணவகங்கள் அனைத்தும் தூய்மையான குடிநீர் மற்றும் நல்ல தரத்துடன் கூடிய உணவு பொருட்களை மட்டுமே பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். மேலும் அனைத்து உணவகங்களும் தங்களது உணவு பொருட்கள் தயாரிக்கும் இடத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

துருப்பிடிக்காத பாத்திரங்களை மட்டுமே சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். சமையலுக்காக பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெயை ஒருமுறைக்கு மேல் பயன்படுத்த கூடாது.
உணவு பொருட்களை பரிமாறுவதற்கு செய்தி தாள்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இறைச்சி கடைகளில் பொட்டமிட பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது. தவறுவோர் மீது உணவு பாதுகாப்பு தரங்கள் நிர்ணய சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

The post தரமற்ற உணவு விற்பதாக புகார் எதிரொலி ஓட்டல்களில் திடீர் சோதனை; 15 கிலோ கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...