×

கால்நடை தீவனங்களுக்காக தக்கைப் பூண்டு வளர்ப்பில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

சாயல்குடி : முதுகுளத்தூர், அபிராமம், திருஉத்தரகோசமங்கை பகுதியில் கால்நடை தீவனம் மற்றும் இயற்கை உரத்திற்காக தக்கைப் பூண்டு செடிகளை விவசாயிகள் ஆர்வத்துடன் வளர்த்து வருகின்றனர்.முதுகுளத்தூர், அபிராமம் மற்றும் திருஉத்தரகோசமங்கை பகுதிகளில் விவசாயம் முதன்மை தொழிலாக உள்ளது. விவசாயிகளில் சிலர் வீடுகளில் கறவை மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளையும் வளர்த்து வருகின்றனர்.

கிராம பகுதியில் பருவ மழைக்காலத்தில் நெல், மிளகாய், சிறுதானியங்கள், தோட்டப்பயிர்கள், எண்ணெய் வித்துகள் பயிரிடப்படுகிறது. இந்த பயிர்கள் அறுவடைக்கு பிறகு கோடையில் பருத்தி பயிரிடப்படுகிறது. இதனால் இக்கிராமங்களில் முழுநேரம் விவசாயம், கால்நடை, மண்சார்ந்த தொழில்கள் நடந்து வருகிறது. இந்தாண்டு பருவமழை குறைவாக பெய்தது. இதனால் நெல், மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டது. இதனால் குறைந்த அளவில் விளைச்சல் இருந்தது. தொடர்ந்து ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நெல், மிளகாய் உள்ளிட்டவை அறுவடை முடிந்து விட்டது. தற்போது போர்வெல் தண்ணீர் உதவியுடன் சில இடங்களில் பருத்தி விவசாயம் மட்டும் நடந்து வருகிறது.

இந்நிலையில் அறுவடை செய்யப்பட்ட வயற்காட்டில் இயற்கை பசுந்தாழ் உரமான தக்கைப் பூண்டு செடியை வளர்ப்பதில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.முதுகுளத்தூர் பாரபத்தி விவசாயிகள் கூறும்போது, நெல், மிளகாய் அறுவடைக்கு பிறகு கோடை உழவு மேற்கொள்ளப்படுவது வழக்கம். வெறும் வயலில் கோடை உழவு மேற்கொள்வதால் குறைவான பயன் ஏற்படும். இயற்கை உரத்திற்காக வயற்காட்டில் ஆட்டு மந்தை அடையபோடுவது வழக்கம். இயற்கை உரம் மற்றும் கால்நடை தீவனத்திற்கு பயன்படக் கூடிய தக்கைப் பூண்டு செடி குறித்து வேளாண்மை துறை அலுவலர்கள் தெரிவித்தனர். அதன்படி போர்வெல் தண்ணீரை பயன்படுத்தி கடந்த 2 வருடங்களாக கோடையில் தக்கைப் பூண்டு செடியை வளர்த்து வருகிறோம்.

மேலும் தற்போது கோடைக்காலம் ஏற்பட்டு விட்டதால் கிராமங்களில் செடி, கொடி, இலை, தழைகள் கிடைக்காது. இதனால் கடைகளில் தீவனங்களை விலைக்கு வாங்கி கறவைமாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு வழங்கவேண்டும்.

இதனால் கூடுதல் செலவு ஏற்படுகிறது.இந்நிலையில் தக்கைப் பூண்டு செடிகளை வளர்த்து அதனை கறவை மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு வழங்கி வருவதால் இயற்கை தீவனமாக கிடைக்கிறது, செலவும் குறைகிறது. தற்போது கோடை மழை பெய்து வருவதால் செடிகள் பசுமையாக வளர்ந்து வருகிறது என்றனர்.

வேளாண்மை துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, தக்கைப் பூண்டு 40 நாட்களில் பூக்கும் ஒரு செடி ஆகும். இயற்கையில் இது சிறந்த பசுந்தாழ் உரமாக கிடைக்கிறது. நெருக்கமாக வளர்க்கப்படும் இச்செடியை பாதி பகுதியை எடுத்து பிற வயல்களிலும் நட்டு பயன்படுத்தலாம்.

தக்கைப் பூண்டு, ஆடு, மாடு சாணம் போட்டு இதன்மேல் உழுவதால் மழை காலத்தில் மழைநீர் வீணாகாமல் விவசாய நிலத்தில் சேமிக்கப்படுகிறது. மண்ணின் தன்மை மாறி காற்றோட்டம் ஏற்படும். நுண்ணுயிர்களின் வளர்ச்சி அதிகரிக்கும், மண்ணில் புதைந்து கிடக்கும் பூச்சி முட்டை அழிக்கப்படும்.

களை செடிகளின் விதைகளும் அழிக்கப்படும். நெல், மிளகாய் போன்ற பயிர்களுக்கு தேவையான இயற்கையான தாழைச்சத்து, நைட்ரஜன், அங்ககசத்து போன்றவை கிடைக்கிறது. இதனால் வருகின்ற பருவ கால விவசாயத்திற்கு நன்மைகள் ஏற்படும்.குறைந்த தண்ணீரில் வளரக்கூடியது என்பதால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் விவசாய நிலங்களில் தக்கைப் பூண்டு செடியை விவசாயிகள் வளர்க்கலாம் என்றார்.

The post கால்நடை தீவனங்களுக்காக தக்கைப் பூண்டு வளர்ப்பில் ஆர்வம் காட்டும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Sayalgudi ,Muthukulathur ,Abhiramam ,Thiruuttarakosamangai ,
× RELATED முதுகுளத்தூர்- அபிராமம் சாலை...