×

ஒகேனக்கல் மலைப்பாதையில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து 30 பேர் படுகாயம்-போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதி

பென்னாகரம் : பென்னாகரம் அருகே ஒகேனக்கல் மலைப்பாதையில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தீர்த்தகிரி நகர் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து, இறுதிச்சடங்கு உள்ளிட்ட சடங்குகளை செய்வதற்காக உறவினர்கள் டூரிஸ்ட் பஸ் பிடித்து நேற்று காலை ஒகேனக்கல் புறப்பட்டனர். பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்(35) என்பவர் வண்டியை ஓட்டினார். அதில், 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

ஒகேனக்கல் ஆஞ்சநேயர் கோயில் வளைவு அருகே வந்தபோது, அங்குள்ள கணவாய் பகுதியில் திடீரென தறிகெட்டு ஓடிய பஸ், நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வண்டியில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கதறி துடித்தனர். விபத்து குறித்து தகவலறிந்ததும் ஒகேனக்கல் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியை முடுக்கி விட்டனர். பஸ்சிற்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இதில், ஆண்-பெண்கள், சிறுவர்கள் உள்பட 30க்கும் மேற்பட்டோர் படுகாயடைந்தனர்.

அவர்கள் அனைவரையும் பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கிரேன் வரவழைத்து கவிழ்ந்து கிடந்த பஸ்சை தூக்கி நிறுத்தினர்.
இந்த சம்பவத்தால் அந்த வழியாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோடை விடுமுறையையொட்டி, ஒகேனக்கல் சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விபத்து காரணமாக வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், சுற்றுலா வந்தவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

The post ஒகேனக்கல் மலைப்பாதையில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து 30 பேர் படுகாயம்-போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Okanagan ,Pennagaram ,Okenakal hill pass ,pass ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி