×

விபத்தில் சிக்கிய ஈரடுக்கு சொகுசு பஸ்

ஓமலூர், மே 12: சேலம் மாவட்டம் ஓமலூர் வழியாக சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் அரசு பொறியியல் கல்லூரி, ஆர்.சி.செட்டிபட்டி, காமலாபுரம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி விபத்து நடைபெற்று வந்தது. அதனால், இந்த பகுதிகளில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்றது. இதில், அரசு பொறியியல் கல்லூரி, ஆர்.சி.செட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு, போக்குவரத்து விடப்பட்டுள்ளது. ஆனால், காமாபுரம் பகுதியில் மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இங்கு ஒரு பகுதியில் பாதி அளவிற்கு பாலம் முடிவடைந்துள்ளது. ஆனால், எதிர்ப்புறம் பணிகள் இன்னும் துவங்காமல் உள்ளது.

இந்த நிலையில், சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு, குறுகிய சாலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மிகக் குறுகிய சாலை என்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் கடந்து செல்ல மணிக்கணக்கில் ஆகிறது. மேலும், சுமார் 200 அடி தூரத்திற்கு முன்பாக மேம்பால பணிகள் நடைபெறுவது குறித்த எந்தவித அறிவிப்பு வைக்கப்பட வில்லை. இரவு நேரங்களில் நெடுஞ்சாலையில் வேகமாக வரும் கார்கள், வாகனங்கள், பேருந்துகள் சர்வீஸ் சாலையில் செல்ல வேண்டியது தெரியாமலும், உடனடியாக திரும்ப முடியாமலும், நேராக சென்று மண் திட்டில் மோதி விபத்துக்குள்ளாகி வருகிறது. இதனால், தினந்தோறும் நள்ளிரவு சமயங்களில், தொடர்ந்து விபத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காலை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூர் சென்ற படுக்கை வசதியுள்ள இரண்டடுக்கு தனியார் சொகுசு பஸ் விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக இதில் பயணம் செய்த 70 பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். தகவலின் பேரில் வந்த போலீசார் மீட்பு வாகனம் மூலம் விபத்தில் சிக்கிய பஸ்சை மீட்டனர். தொடர்ந்து விபத்துக்களை தடுக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post விபத்தில் சிக்கிய ஈரடுக்கு சொகுசு பஸ் appeared first on Dinakaran.

Tags : Erud ,Omalur ,Salem Bangalore National Highway ,Salem district ,Erudku ,Dinakaran ,
× RELATED ஓமலூர் உட்கோட்டத்தில் மது விற்ற 11 பேர் கைது