×

தட்டாஞ்சாவடியில் விலைக்கு வாங்குவதாக லாரிகளை ஓட்டிச் சென்று நம்பிக்கை மோசடி

புதுச்சேரி, மே 12: புதுவை, தட்டாஞ்சாவடியில் விலைக்கு வாங்குவதாக 4 லாரிகளை ஓட்டி சென்று நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டதாக பெண் தொழிலதிபர் போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
புதுச்சேரி, தட்டாஞ்சாவடி, குண்டுபாளையம், நவசக்தி நகர், முதலாவது மெயின் ரோட்டில் வசிப்பவர் திலகவதி (49). இவரது கணவர் புருஷோத்தமன் இறந்துவிட்டார். அவருக்கு சொந்தமான லாரிகளை திலகவதி தனது குழந்தைகள் மூலம் பராமரித்து வந்தாராம். அதன்பிறகு 3 லாரிகளை விற்பதற்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, எஸ்வி நகரம், மொரப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்த கேசவன் (48) அதை மொத்தமாக வாங்குவதற்காக ரூ.42.75 லட்சம் விலைபேசி ஒப்பந்தம் செய்ததாக தெரிகிறது.
உடனடியாக ரூ.1 லட்சம் முன்பணத்தை செலுத்திய கேசவன், மீதமுள்ள ரூ.41.75 லட்சத்தை செலுத்த 3 மாத கால அவகாசம் கோரியுள்ளார். அதற்குள் வண்டிக்குரிய ஆவணங்களை கொடுத்துவிட வேண்டியது என ஒப்பந்தம் போடப்பட்டது. இதையடுத்து வண்டிக்குரிய ஆவணங்களை மாற்றித்தர திலகவதி தரப்பு தயாராக இருந்தது. கேசவன் தன்னால் பணத்தை மொத்தமாக செலுத்த முடியாத காரணத்தால் மேற்படி லாரிகளை மாத வாடகைக்கு விடுமாறு கூறினாராம்.

அதன்படி மாதம் லாரி ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வீதம் 3 லாரிக்கும் மாதந்தோறும் கூடுதலாக ஒரு லாரியையும் சேர்ந்து ரூ.1.20 லட்சத்துக்கு வாடகைக்கு திலகவதி தரப்பு 2021 பிப்.1ம்தேதி கொடுத்ததாம். ஆனால் இன்று வரை எந்தவித வாடகையும் கேசவன் கொடுக்காததோடு, லாரிகளையும் திருப்பி ஒப்படைக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கோரிமேடு காவல் நிலையத்தில் திலகவதி நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உத்தரவின்பேரில் எஸ்ஐ குமார் தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் வாடகைக்கு கேசவன் தரப்பு வாங்கிச் சென்ற 4 லாரிகளையும் மீட்டு கேசவனை கைது செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

The post தட்டாஞ்சாவடியில் விலைக்கு வாங்குவதாக லாரிகளை ஓட்டிச் சென்று நம்பிக்கை மோசடி appeared first on Dinakaran.

Tags : Thattanchavadi ,Puducherry ,Puduvai ,Thattanjavadi ,Dinakaran ,
× RELATED புதுவையில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது