×

ஜிப்மரில் உயர்த்தப்பட்ட சேவை கட்டணம் தற்காலிக நிறுத்தம்

புதுச்சேரி, மே 12: அரசியல் கட்சிகளின் தொடர் போராட்டம் காரணமாக ஜிப்மரில் பரிசோதனைகளுக்காக உயர்த்தப்பட்ட கட்டணத்தை திடீரென நிறுத்தி வைத்து ஜிப்மர் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. புதுச்சேரி கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனையில் 63 வகையான உயர்தர பரிசோதனைகளுக்கு ரூ.500 முதல் ரூ.12 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என நிர்வாகம் கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. இந்த புதிய கட்டண உயர்வானது ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருவதாக அறிவித்தது. இதற்கு புதுச்சேரியில் உள்ள எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. ஜிப்மர் மருத்துவமனை முன்பு திமுக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராட்டங்களை நடத்தியது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், இணையமைச்சர் ஆகியோரிடம் கவர்னர் பேசியதோடு, கட்டண உயர்வை பரிசீலிக்குமாறு வலியுறுத்தினார்.

இதனிடையே இரு தினங்களுக்கு முன்பு ஜிப்மரில் நிதி பற்றாக்குறை எதுவுமில்லை. மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்கி இருப்பதாகவும், இலவசமாக மருந்து வழங்குவதோடு, பழைய நடைமுறையே தொடரும் எனவும் கூறியிருந்தது. இதன் தொடர்ச்சியாக ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் ஒப்புதலின் பேரில், மருத்துவக் கண்காணிப்பாளர் அங்குள்ள அனைத்து மருத்துவதுறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ஜிப்மரில் உயர்தர பரிசோதனைகளுக்காக மார்ச் 16ம்தேதி அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வை நிறுத்தி வைப்பதாகவும், அதே நேரத்தில் உயர்தர பரிசோதனைகள் இன்னமும் துவங்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்மூலம் பரிசோதனைகளுக்கான கட்டணத்தில் பழைய நடைமுறையே தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. உயர்தர பரிசோதனைகள் துவக்கப்பட்டால், இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருமா? என்பது குறித்து விளக்கமாக தெரிவிக்கவில்லை.

The post ஜிப்மரில் உயர்த்தப்பட்ட சேவை கட்டணம் தற்காலிக நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : JIPMER ,Puducherry ,Jipmar ,
× RELATED புற்றுநோய் நோயாளிகள் அலைக்கழிப்பு ஜிப்மர் அதிகாரியிடம் முறையீடு