×

டி.டி.வி.தினகரனுடன் ஓபிஎஸ் இணைந்தது சந்தர்ப்பவாத அரசியல் தேனியில் தங்கதமிழ்செல்வன் தாக்கு

தேனி, மே 12: சசிகலா மற்றும் டிடிவி தினகரன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தியவர் ஓ.பன்னீர்செல்வர். தினகரனுக்கு எதிராக பேசிய பன்னீர்செல்வம், சந்தர்ப்பவாத அரசியலுக்காக, பதவி சுகத்திற்காக அவருடன் சேர்ந்துள்ளார் என தங்கதமிழ்செல்வன் பொதுக்கூட்டத்தில் பேசினார். தேனி வடக்கு ஒன்றிய திமுக சார்பில், திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குப்பிநாயக்கன்பட்டியில் நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. தேனி வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், தேனி யூனியன் சேர்மனுமான சக்கரவர்த்தி தலைமை வகித்தார். ஒன்றிய அவைத்தலைவர் ராம்தாஸ் வரவேற்று பேசினார். ஒன்றிய துணை செயலாளர் சஞ்சீவிராம், ஒன்றிய பொருளாளர் அரியமுத்து, மாவட்ட பிரதிநிதி பழனிராம், முருகேசன் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்செல்வன் கலந்து கொண்டு பேசும்போது, திமுக ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. திமுக ஆட்சியால் புதுமைப்பெண் திட்டம் மூலம் பிளஸ் 2 உடன் கல்வியை நிறுத்தாமல் ஏழை, எளிய மாணவியர் கல்வியைத் தொடர மாதம் ரூ.1 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் கட்டணமின்றி டவுன் பஸ்களில் பயணிக்க உத்தரவிடப்பட்டதால் பணிக்கு செல்லும் பெண்கள் முழு பயன்பாடு அடைந்து வருகின்றனர். விரைவில் மகளிருக்கு உரிமைத்தொகையாக தமிழ்நாட்டில் 1 கோடி மகளிருக்கு மாதம் ரூ.1 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இந்த உரிமைத்தொகை மூலமாக மாதம் அரசுக்கு ரூ.1 ஆயிரம் கோடி செலவாகும். ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி செலவாகும். 5 ஆண்டுகளுக்கு 60 ஆயிரம் கோடி செலவாகும்.

கடந்த கால ஆட்சியில் ஐந்தே முக்கால் லட்சம் கோடி கடன் வைத்து சென்றனர். இதனை சரிசெய்து திறம்பட ஆட்சி நடத்தி சொன்னதை செய்து வருகிறார்முதல்வர் மு.க.ஸ்டாலின். முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த காலை சிற்றுண்டி திட்டத்தால் இன்றைக்கு ஏழை, கூலித்தொழிலாளிகள் தங்கள் குழந்தைகளை கவலையின்றி பள்ளிக்கு அனுப்பும் வாய்ப்பு உருவாகி உள்ளது. நான் முதல்வன் திட்டம் மூலம் பல லட்சம் மாணவ, மாணவியர் பயனடைந்து உள்ளனர். முதல்வர், துணை முதல்வர், எதிர்கட்சித் தலைவர், கட்சியில் ஒருங்கிணைப்பாளர் என பல பதவிகளை பார்த்தவர் பன்னீர்செல்வம். ஜெயலலிதா இறந்தபிறகு முதல்வர் பதவி போனதும் தர்மயுத்தம் நடத்தியவர். அப்போது சசிகலா மற்றும் டிடிவி தினகரன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தியவர். இன்றைக்கு பதவி சுகத்திற்காக தினகரன் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களை மறந்து மக்களை ஏமாற்றும் வகையில் சேர்ந்திருக்கிறார்’’ எனப் பேசினார். முடிவில் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் முருகஜெகதீசன் நன்றி கூறினார்.

The post டி.டி.வி.தினகரனுடன் ஓபிஎஸ் இணைந்தது சந்தர்ப்பவாத அரசியல் தேனியில் தங்கதமிழ்செல்வன் தாக்கு appeared first on Dinakaran.

Tags : OPS ,TTVThinakaran ,Thangathamilselvan ,Theni ,O. Panneerselvar ,Sasikala ,DTV Dhinakaran ,Dinakaran ,Thangathamithselvan ,DTV Dinakaran ,
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி