×

சார் பதிவாளர் அலுவலகம் மாற்றப்பட்டதால் பத்திரப்பதிவுக்கு 20 கி.மீ அலையும் பழஞ்சூர், பாப்பான்சத்திரம் மக்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருவள்ளூர், மே 12: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியம், செம்பரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பழஞ்சூர், பாப்பான்சத்திரம் ஆகிய 2 கிராமங்கள் கடந்த 23 ஆண்டுகளுக்கு மேலாக நில ஆவணங்கள், வரி, பிறப்பு இறப்பு சான்றிதழ் பதிவு, மின்சாரம் வருவாய் ஆவணங்கள், கிராம நிர்வாகம், காஞ்சிபுரம் மாவட்டத்தின் கீழும், காவல்நிலையம், மருத்துவமனை, குடும்ப அட்டை ஆகியவை திருவள்ளூர் மாவட்டத்தின் கீழும் நிர்வகிக்கப்பட்டு வந்தது.

இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குள் இருக்கும் இந்த 2 கிராம மக்கள் அரசின் சேவைகளை பெறுவதற்கு 2 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். எனவே, இந்த 2 கிராமங்களையும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும், என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் பழஞ்சூர், பாப்பான்சத்திரம் ஆகிய 2 கிராமங்கள்ளையும் தற்போது முழுவதுமாக திருவள்ளூர் மாவட்டத்தில் இணைத்து அனைத்து அரசு பணிகளுக்காகவும் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது பழஞ்சூர், பாப்பான்சத்திரம் ஆகிய 2 கிராமங்களின் நிலங்கள், வீடுகள், வீட்டுமனைகள் ஆகியவை பத்திரப்பதிவு செய்ய காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியம், செம்பரம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பழஞ்சூர், பாப்பான்சத்திரம் ஆகிய 2 கிராமங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்தபோதே பத்திரப்பதிவு பணிகள் அனைத்தும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை நிலங்கள், வீடுகள், வீட்டுமனைகள் ஆகிய அனைத்தும் பூந்தமல்லியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் தான் பத்திர பதிவு செய்யப்பட்டு வந்தன.

ஆனால் தற்போது பழஞ்சூர், பாப்பான்சத்திரம் ஆகிய 2 கிராமங்களையும் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட பிறகு பழஞ்சூர், பாப்பான்சத்திரம் ஆகிய 2 கிராமங்களின் நிலங்கள், வீடுகள், வீட்டுமனைகள் ஆகியவை அனைத்தும் பத்திரப்பதிவு செய்ய காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பூந்தமல்லிக்கு 5 கி.மீ. தூரம் சென்று வந்த நிலையில் தற்போது 20 கி.மீ. தூரத்தில் உள்ள பெரும்புதூருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே மீண்டும் பழஞ்சூர், பாப்பான்சத்திரம் ஆகிய 2 கிராமங்களின் நிலங்கள், வீடுகள், வீட்டுமனைகள் ஆகியவை அனைத்தும் பத்திரப்பதிவு செய்ய பூந்தமல்லியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு மாற்றித் தருமாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் செம்பரம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் வி.சாந்தி வின்சென்ட் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். வழக்கறிஞர் கே.எம்.தர் மற்றும் துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

The post சார் பதிவாளர் அலுவலகம் மாற்றப்பட்டதால் பத்திரப்பதிவுக்கு 20 கி.மீ அலையும் பழஞ்சூர், பாப்பான்சத்திரம் மக்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Palanjore ,Papanchatram ,Tiruvallur ,Palanjur ,Thiruvallur District ,Poontamalli Union ,Sembarambakkam Panchayat ,
× RELATED மீஞ்சூர் பகுதியில் ஓடும் காரில்...