செங்கம், மே 12: செங்கம் அடுத்த முன்னூர் மங்கலம் கிராமத்தில், கி.பி. 8ம் நூற்றாண்டை சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறையினர் கிராமப்புற கோயில்களின் வரலாற்று தன்மை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, செங்கம் அடுத்த முன்னூர்மங்கலம் கிராமத்தில் ஆய்வு செய்தபோது பழமையான கொற்றவை சிற்பம் ஒன்றை கண்டெடுத்துள்ளனர். இதுகுறித்து தொல்லியல் துறை ஆய்வர் இரா.சேகர் தெரிவித்துள்ளதாவது:
செங்கம் அடுத்த முன்னூர்மங்கலம் கிராமத்தில் பழமையான கோயில்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, ஊர் எல்லையில் காவல் தெய்வமாக கிராம மக்கள் வழிபாடு செய்து வரும் பழமையான கொற்றவை சிலை குறித்து தெரியவந்தது. இதுகுறித்து தீவிர ஆய்வு செய்தததில் இந்த கொற்றவை சிற்பம் கி.பி. 8ம் நூற்றாண்டு பல்லவர் காலத்தை சேர்ந்ததாக தெரிகிறது. 4 அடி உயரமும், தலையில் சிறிய கரண்ட மகுடம், 4 கைகளுடன் இந்த சிற்பம் காணப்படுகிறது.
செங்கம் பகுதி பல்லவர் கால நடுகற்கள் மற்றும் கல்வெட்டுகளுக்கு புகழ்பெற்ற பகுதியாகும். அதேபோல், முன்னூர் மங்கலம் கிராமத்தில் உள்ள கோயில் கல்வெட்டில் தமிழ் எழுத்துகளில் எழுதியது தெரிய வந்துள்ளது. இந்த கிராமத்தை சுற்றிலும் பிராமணர்களுக்கு தானம் வழங்கிய பகுதிகளாக இருந்துள்ளன. அதேபோல், முன்னூர் மங்கலம் கிராமமும் தானம் அளிக்கப்பட்ட பகுதியாக இருந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post கி.பி. 8ம் நூற்றாண்டு கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு appeared first on Dinakaran.