×

நிதிநிறுவன பரிசு பொருள் குடோனுக்கு `சீல்’ பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி: செய்யாறில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி

செய்யாறு, மே 12: செய்யாறில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்த நிதிநிறுவனத்தின் பரிசு பொருட்கள் இருந்த குடோனுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக சீல் வைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரை தலைமை இடமாக கொண்டு விஆர்எஸ் என்ற தீபாவளி சீட்டு மற்றும் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் சார்பில் செய்யாறு, ஆரணி, வந்தவாசி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட கிளைகள் செயல்பட்டு வந்தன. இந்த நிறுவனத்தின் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி, பல ஆயிரக்கணக்கான மக்கள் தீபாவளி சீட்டு கட்டி வந்தனர். சிலர் வைப்புத்தொகையும் செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து, நிதிநிறுவனம் சார்பில் சீட்டு கட்டிய மக்களுக்கு மளிகை பொருட்கள், பாத்திரங்கள், நான்ஸ்டிக் தவா, குக்கர் போன்ற பல்வேறு பரிசு பொருட்களை வழங்கி வந்தனர். நிதிநிறுவனத்தினர் 2 ஆண்டுகளுக்கு மேல் முறையாக பரிசு பொருட்கள் வழங்கி வந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிர்வாக சிக்கல் ஏற்பட்டது.

இதன் காரணமாக சீட்டு கட்டியவர்களுக்கு முறையாக பொருட்கள் விநியோகம் செய்யவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் ஒருமாதமாக பல்வேறு போராட்டங்களை நடத்தினர். தொடர்ந்து, பலர் செய்யாறு போலீசில் புகார் செய்தனர். மேலும், பொருளாதார குற்றப்பிரிவு போலீசிலும் 500க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர். அதன்பேரில், விஆர்எஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் சம்சுமைதீன், சம்சுதீன், வீரமணி ஆகிய 3 பேரை போலீசார் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர்.

தொடர்ந்து, விஆர்எஸ் நிறுவனத்தின் சம்சுமைதீன் மனைவி ரஷ்யாக்கனி சிக்கந்தர் என்பவர், செய்யாறு மண்டி தெருவில் உள்ள நெல்மண்டி வியாபாரிகள் சங்க சத்திரத்தை வாடகைக்கு எடுத்து பார்சல் சர்வீஸ் கம்பெனி நடந்து வந்ததும், அந்த இடத்தில் தீபாவளி சீட்டு கட்டியவர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பரிசு பொருட்கள் வைக்கும் குடோனாக பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில், மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கணேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆசைத்தம்பி, முருகன், ரீத்தா ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று அந்த சத்திரத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அங்கிருந்த மூட்டைகளை பிரித்து சோதனை செய்தபோது, சில்வர் டிரம், கிண்ணம், தூக்கு, டம்ளர்கள், தட்டுகள், பால்குண்டா, பேன், டிபன் பாக்ஸ், நான்ஸ்டிக் தவா, கடாய், குக்கர் உள்ளிட்ட 13 பரிசு பொருட்கள் இருப்பது தெரியவந்தது. மேலும், அந்த குடோனில் 700 மூட்டைகளில் இந்த பரிசு பொருட்கள் இருந்தன. இதைத்தொடர்ந்து, நிதிநிறுவனத்தின் பரிசு பொருட்கள் இருந்த சத்திரத்திற்கு போலீசார் அதிரடியாக சீல் வைத்தனர்.
இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டிஎஸ்பி கணேசன் கூறியதாவது:

மோசடி தொடர்பாக விஆர்எஸ் நிறுவன உரிமையாளர்கள் சம்சுமைதீன், சம்சுதீன், வீரமணி ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகிறோம். இந்த நிறுவனம் தொடர்புடைய குடோன்கள் மற்றும் சொத்துக்கள் குறித்து தீவிர விசாரணை செய்து வருகிறோம். இதுவரை ₹30 கோடி வரை சொத்துகள் மற்றும் பொருள்களை பறிமுதல் செய்துள்ளோம். மேலும், குடோன்களில் பதுக்கி வைத்த பொருளை ஏலம் விட்டு அதன் மூலம் வரும் நிதியை டிடியாக எடுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளோம்.

எனவே, கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். நீங்கள் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை அரசு உடமையாக்கப்பட்ட வங்கிகளில் சேமித்து, அவர்கள் கொடுக்கக்கூடிய நியாயமான வட்டியை பெற்றுக் கொள்ள வேண்டும். அதிக பொருள்கள், அதிக வட்டி போன்ற ஆசைவார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

The post நிதிநிறுவன பரிசு பொருள் குடோனுக்கு `சீல்’ பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி: செய்யாறில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி appeared first on Dinakaran.

Tags : Seiyar ,Seyyar ,Diwali ,
× RELATED செய்யாறு அருகே இன்று நடக்கும் திருமண...