×

சூடுபிடிக்கும் 182 ஏக்கர் அரசு நில மோசடி வழக்கு; டிஆர்ஓக்களை கைது செய்ய திட்டம்: ஓபிஎஸ்சுக்கு நெருக்கமானவரும் சிக்குகிறார்

தேனி: அரசு நிலம் 182 ஏக்கர் மோசடி வழக்கில் டிஆர்ஓக்களை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதில், ஓபிஎஸ்சுக்கு நெருக்கமானவரும் சிக்க உள்ளார். தேனி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் அருகே வடவீரநாயக்கன்பட்டியில் 109 ஏக்கர், தாமரைக்குளத்தில் 60 ஏக்கர், கெங்குவார்பட்டியில் 13 ஏக்கர் என அரசுக்கு சொந்தமான 182 ஏக்கர் நிலத்தை ஓ.பன்னீர்செல்வத்தின் முன்னாள் உதவியாளரும், அதிமுக பிரமுகருமான அன்னப்பிரகாஷ் உள்ளிட்டோர், அரசு அதிகாரிகள் உதவியுடன் தனியாருக்கு முறைகேடாக பட்டா மாறுதல் செய்து ெகாடுத்தனர்.

இதுதொடர்பாக அதிமுகவை சேர்ந்த அன்னப்பிரகாஷ், முத்துவேல்பாண்டியன், போஸ் உள்ளிட்ட 14 பேர் மீது தேனி சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த 2 தாசில்தார்கள் உள்பட 7 பேர் கடந்த 2021ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அன்னபிரகாஷ், தாசில்தார் கிருஷ்ணகுமார், துணை தாசில்தார்கள் மோகன்ராம், சஞ்சீவ் காந்தி உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அதிமுக பிரமுகர் அன்னப்பிரகாஷின் சகோதரரான வடபுதுப்பட்டி தர்மர் (58), அபிமன்னன் (51), அம்மாபட்டி முத்துராஜ் (60) ஆகிய 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி போலீசார் கூறுகையில், ‘மோசடியில் உடந்தையாக இருந்த கோட்டாட்சியர்களையும் (டிஆர்ஓ) கைது செய்ய விரைவில் நடவடிக்கை தொடங்கப்படும்’ என்றனர். கோட்டாட்சியர்களாக இருந்தவர்களில் ஆனந்தியின் தந்தை மதுரை மாவட்டம் பரவை பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் என்பதும், இவர் ஓபிஎஸ்சுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post சூடுபிடிக்கும் 182 ஏக்கர் அரசு நில மோசடி வழக்கு; டிஆர்ஓக்களை கைது செய்ய திட்டம்: ஓபிஎஸ்சுக்கு நெருக்கமானவரும் சிக்குகிறார் appeared first on Dinakaran.

Tags : OPS ,Theni ,Dinakaran ,
× RELATED 2001, 2017ல் நான் முதல்வராயிருக்க முடியும்:...