×

கோயம்பேடு பாலத்தின் கீழ் ரூ.10 கோடியில் பூங்கா : அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: சென்னை, கோயம்பேட்டில் உள்ள சாலை சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2023-24ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் விரைவுபடுத்த வேண்டுமென்ற உத்தரவின் அடிப்படையில், சென்னைப் பெருநகர பகுதியிலுள்ள 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளில் 22 இடங்களில் கள ஆய்வு செய்திருக்கிறேன்.

அதில் ஒன்றாக, கோயம்பேடு பாலத்தின் கீழே உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் இயற்கை வனப்புடன் பூங்கா அமைக்கப்பட உள்ளது. மேலும், தி.நகர் சோமசுந்தரம் விளையாட்டு மைதானத்தில் 5 ஏக்கரில் கிரிக்கெட் விளையாட தனி மைதானம், டென்னிஸ் கோர்ட் மற்றும் பூங்கா வசதி, உடற்பயிற்சி கூடம் போன்றவை ரூ.10 கோடியில் அமைக்கப்படும். மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோயில் அருகிலுள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் ரூ.2.50 கோடியில் உள் விளையாட்டு அரங்கம் மற்றும் ஒரு மினி விளையாட்டு மைதானத்தை உருவாக்க உள்ளோம். இப்பணிகள் துவங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், சென்னை தீவுத்திடலில் உள்ள சுற்றுலா பொருட்காட்சியில் உள் விளையாட்டு அரங்கம் அமைத்தல், கிழக்கு கடற்கரை சாலையிலே 5 கிலோ மீட்டர் நீளத்துக்கு மிதிவண்டி பாதை, கடற்கரை பார்வதி நகர் முதல் எண்ணூர் கடற்கரை பகுதியில் 5 கி.மீ. நீளத்துக்கு அழகுபடுத்துதல் மற்றும் மாமல்லபுரத்தில் பேருந்து நிலையம் அமைத்தல் போன்ற பணிகளும் நடைபெறும். அப்போது, மேயர் பிரியா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, எம்எல்ஏக்கள் வேலு, பிரபாகர ராஜா, கருணாநிதி, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post கோயம்பேடு பாலத்தின் கீழ் ரூ.10 கோடியில் பூங்கா : அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : 10 Crore ,Koyambedu Bridge ,Minister ,Shekharbabu ,Chennai ,Coimbatore, Chennai ,Dinakaran ,
× RELATED பாஜகவுக்கு ரூ.10 கோடி நன்கொடை கொடுத்து...