
சென்னை: ‘முதல்வர் தேர்தல் அறிக்கையில் சொன்ன ஒவ்வொரு வாக்குறுதியையும் நாங்கள் நிறைவேற்றி வருகிறோம்’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு கட்டிட அரங்கில், பத்திரிகையாளர் நல வாரியத்தின் சார்பில் 7 பத்திரிகையாளர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டை, அரசு அச்சகப் பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 8 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை, 1 லட்சத்து ஒன்றாவது தமிழரசு இதழ் சந்தாதாரருக்கு தமிழரசு இதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் செல்வராஜ் வரவேற்றார்.
இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உறுப்பினருக்கு உறுப்பினர் அட்டை, அரசு அச்சக பணியாளர்களின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை, 1 லட்சத்து ஒன்றாவது தமிழரசு இதழ் சந்தாதாரருக்கு தமிழரசு இதழை வழங்கினார். மேலும், சென்னை தண்டையார்பேட்டை காமராஜர் நகர், அரசு அச்சகப் பணியாளர்களுக்கு 96 புதிய குடியிருப்பு ரூ.34.49 கோடி கட்ட அடிக்கல் நாட்டினார்.விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
திமுக அரசு தேர்தல் அறிக்கையிலே சொன்னபடி, பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கும் பணி இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. முதல்வர் தேர்தல் அறிக்கையில் சொன்ன ஒவ்வொரு வாக்குறுதியையும் ஒவ்வொரு நாளாக நாங்கள் நிறைவேற்றி வருகின்றோம். தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதியை காப்பாற்றியிருக்கிறோம், நிறைவேற்றியிருக்கிறோம்.
பத்திரிகையாளர் நலன் சார்ந்த அரசாக என்றுமே திமுக அரசு செயல்பட்டு வருகிறது. ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல, சென்ற அரசால் போடப்பட்ட அத்தனை அவதூறு வழக்குகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசாணை வெளியிட்டு ரத்து செய்தார். அதேபோல, கொரோனா நேரத்தில், பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்தது மட்டுமல்லாமல், அவர்களுக்கெல்லாம் ரூ.5000 நிதி உதவி கிடைக்கச் செய்தது திமுக அரசு. தொடர்ந்து, பத்திரிகையாளர்களுக்காக சேவை செய்ய நம்முடைய அரசு காத்துக் கொண்டிருக்கிறது.
எப்போதும் போல நீங்கள் தொடர்ந்து இந்த அரசுக்கு துணைநின்று, ஏதாவது தவறு நடந்தால் அதை சுட்டிக்காட்டி, நல்லது செய்தால் எங்களை தட்டிக்கொடுத்து நீங்களெல்லாம் உங்களுடைய பணியை தொடர வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் கலாநிதி வீராசாமி எம்பி, மேயர் ஆர்.பிரியா, எம்எல்ஏ ஜெ.ஜான் எபினேசர், துணை மேயர் மகேஷ்குமார், செய்தி மக்கள் தொடர்புத்துறை செயலாளர் செல்வராஜ், இயக்குநர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post முதல்வர் தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.