×

வீடு வாங்கித்தருவதாக ரூ.49 லட்சம் மோசடி; எம்டிசி ஓட்டுநருக்கு நிபந்தனை முன் ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக பதிவுசெய்யபட்ட வழக்கில், சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டுமென்ற நிபந்தனையுடன் அரசு பேருந்து ஓட்டுனருக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அயம்பாக்கத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாகக் கூறி மாநகர போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரியும் சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த சுரேஷ்பாபு என்பவர் கடந்த 2017ல் 33 நபர்களிடம் தலா ஒன்றரை லட்சம் ரூபாய் என 49 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த அந்தோணி என்பவர் டிஜிபி அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், சுரேஷ்பாபு மற்றும் அவரது குடும்பத்தினர் மூவர் மீது 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் ஓட்டுநர் சுரேஷ்பாபு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஸ்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, 25 லட்ச ரூபாய்க்கான அசையா சொத்துக்கான ஆவணங்களை எழும்பூரில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மறு உத்தரவு வரும் வரை சம்மந்தப்பட்ட விசாரணை அதிகாரி முன்பு தினமும் மாலை ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.

The post வீடு வாங்கித்தருவதாக ரூ.49 லட்சம் மோசடி; எம்டிசி ஓட்டுநருக்கு நிபந்தனை முன் ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : MTC ,Chennai ,Tamil Nadu Urban Habitat Development Board ,Dinakaran ,
× RELATED தென்சென்னை தொகுதியில்...