×

9 தொழிற்பேட்டைகளில் 208 தொழில்முனைவோருக்கு 70 ஏக்கர் நில பட்டா : அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

சென்னை: தமிழகத்தில் உள்ள 9 தொழிற்பேட்டைகளில், 208 தொழில்முனைவோர்களுக்கு 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்திற்கான பட்டாவை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். சென்னை கிண்டி சிட்கோ தலைமை அலுவலகத்தில் தொழில் முனைவோருக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு 208 தொழில்முனைவோர்களுக்கு பட்டா வழங்கினார். மேலும் தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான இரு பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும், சிட்கோ தொழிற்பேட்டையில் சுகாதார பணிகளை மேற்கொள்ளும் 25 தூய்மை பணியாளர்களுக்கு சீருடையும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசியதாவது: தமிழகம் முழுவதும் 14 ஆயிரத்து 983 தொழில் மனைகளுடன் 127 தொழிற்பேட்டைகள் உள்ளன. இதில் 60 தொழிற்பேட்டைகளில் உள்ள 3,700 ஏக்கர் நிலம், அரசு புறம்போக்கு வகைப்பாட்டில் இருக்கிறது. இதனால், தொழில் நிறுவனங்கள் கிரைய பத்திரம் பெற்றிருந்தாலும், பட்டா பெற முடியவில்லை. திமுக அரசு பொறுப்பேற்றவுடன், இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென அரசிடம் தொழில்முனைவோர் கோரிக்கை வைத்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த கோரிக்கைகளின் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, நில வகைப்பாட்டினை மாற்றிட தலைமை செயலாளர் தலைமையில் அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவினை அமைத்து உத்தரவிட்டார்.

இக்குழு, முதல்கட்டமாக 32 தொழிற்பேட்டைகளில் 1,569 ஏக்கர் நிலங்களுக்கான வகைப்பாட்டினை மாற்றி, பட்டா வழங்க பரிந்துரைத்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், 1,245 ஏக்கர் நிலம் பட்டா வழங்குவதற்காக தமிழ்நாடு சிட்கோ பெயரில் நிலமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 9 தொழிற்பேட்டைகளில் உள்ள 208 தொழில்முனைவோர்களுக்கு 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்திற்கான பட்டா வழங்கப்பட்டு உள்ளது. ஏனையோர்க்கு படிப்படியாக பட்டா வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியின் போது துறை அரசு செயலாளர் அருண்ராய், சிட்கோ மேலாண்மை இயக்குநர் மதுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post 9 தொழிற்பேட்டைகளில் 208 தொழில்முனைவோருக்கு 70 ஏக்கர் நில பட்டா : அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Minister Thamo Anparasan ,Chennai ,Tamil Nadu ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...