×

டி.டி.வி. தினகரனுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு ஏன்?: பரபரப்பான புதிய தகவல்கள்

சென்னை: டி.டி.வி.தினகரனை, ஓ.பன்னீர்செல்வம் திடீரென சென்று சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி தொகுதியில் போட்டியிட உள்ள தனது மகனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துதான் இரண்டு பேரும் பேசியுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக பல அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. ஆனாலும், அனைவரையும் சரிக்கட்டி சசிகலா ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி 2017ம் ஆண்டு முதல்வரானார். அவர் 4 ஆண்டுகள் பதவியில் இருந்தபோது, அதிமுகவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். ஆனாலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடியின் முன்னேற்றத்துக்கு தொடர்ந்து தடை போட்டு வந்தார்.

இந்நிலையில்தான் 2021ம் ஆண்டு தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து அதிமுகவை கைப்பற்ற எடப்பாடி தனது ஆதரவாளர்களுடன் தீவிரமாக களமிறங்கினார். இதற்கு எதிராக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து தூக்கினார். இதுகுறித்து நீதிமன்றம் சென்றார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் நீதிமன்ற தீர்ப்பானது ஓபிஎஸ்க்கு பெரிய பின்னடவை ஏற்படுத்தியது. இதையடுத்து, அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு வருகிறார்.

ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால், தற்போது அவரால் கட்சிக்குள் இணைந்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டதுடன், அரசியலில் தனித்துவிடப்பட்டார். அவர் பெரிதும் நம்பி இருந்த டெல்லி பாஜ தலைமையும் அவரை கைவிட்டுவிட்டது. இதனால், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று தொண்டர்களை சந்திக்கப்போவதாக ஓபிஎஸ் கூறினார். ஆனாலும், தற்போது திருச்சியில் மட்டும் மாநாடு நடத்தினார். டெல்டா மாவட்டம் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கும் சென்று பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக ஓபிஎஸ் அறிவித்தாலும், அதற்கான எந்த பணிகளும் இதுவரை நடைபெறவில்லை.

இந்த நிலையில்தான் திடீரென மூன்று நாட்களுக்கு முன் ஓ.பன்னீர்செல்வம் திடீரென சென்னை, அடையாரில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்தார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், முன்னாள் முதல்வராக இருந்த ஒருவர் இவ்வளவு தூரம் இறங்கி சென்று டி.டி.வி.தினகரனை அவரது இல்லத்துக்கே சென்று சந்தித்தது விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்த சந்திப்புக்கு பிறகு பேட்டி அளித்த ஓபிஎஸ், இருவரும் இணைந்து செயல்பட உள்ளோம் என்றும், சசிகலாவையும் விரைவில் சந்திப்பேன் என்றும் கூறினார்.

சசிகலா, டி.டி.வி.தினகரனை விமர்சித்துதான் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். பின்னர் பாஜ சமாதானம் செய்து அதிமுகவில் எடப்பாடியுடன் இணைந்து செயல்பட ஓபிஎஸ் சம்மதித்தார். இந்த நிலையில், திடீரென டி.டி.வி.தினகரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தது ஏன் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.அதாவது, 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் தற்போது அதிமுக எம்பியாக உள்ள தனது மகன் ரவீந்திரநாத் மீண்டும் போட்டியிட விரும்புகிறார். ஆனால், டி.டி.வி.தினகரனும் தேனி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு, அதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில நாட்களாக தேனிக்கு அடிக்கடி சென்று நிர்வாகிகளையும், பொதுமக்களையும் சந்தித்து வருகிறார்.

இதனால், டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்டால் தனது மகன் ரவீந்திரநாத் வெற்றிபெற முடியாது. அதனால், டி.டி.வி.தினகரனை சந்தித்து, நாம் இணைந்து செயல்படுவோம். அதேநேரம் தேனி தொகுதியை தனது மகனுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். நீங்கள் அங்கு போட்டியிட கூடாது என்று கூறியுள்ளார்.நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்தும் அப்போது இருவரும் பேசியுள்ளனர். அப்படி இணைந்து போட்டியிட்டால், தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளரை நிறுத்தாது என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதேநேரம், ராமநாதபுரம், சிவகங்கையில் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டால் வெற்றிபெற நாங்கள் (ஓபிஎஸ் அணி) முழு முயற்சி செய்வோம் என்றும் கூறியுள்ளார். ஆனால், இதற்கு டி.டி.வி.தினகரன் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருப்பதால், மீண்டும் டி.டி.வி.தினகரன், சசிகலா மற்றும் பாஜக தலைவர்களை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தவும் ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

The post டி.டி.வி. தினகரனுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு ஏன்?: பரபரப்பான புதிய தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : DTV ,OPS ,Dhinakaran ,Chennai ,O. Panneerselvam ,Dinakaran ,Theni ,T.D.V. ,
× RELATED 2001, 2017ல் நான் முதல்வராயிருக்க முடியும்:...