×

மியான்மர் நோக்கி நகர்கிறது; மிக தீவிர புயலாக மாறியது ‘மோக்கா’: மேலும் வலுப்பெற்று 14ம் தேதி கரையை கடக்கும்

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள மோக்கா புயல் நேற்று இரவு 1 மணி அளவில் மேலும் வலுப்பெற்று மிகத் தீவிரப் புயலாக மாறியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று, 14ம் தேதி மியான்மர் அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் படிப்படியாக வலுப்பெற்று, 10ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று அதிகாலையில் அது மோக்கா புயலாக வலுப்பெற்று போர்ட் பிளேயரில் இருந்து 510 கிமீ மேற்கு-தென்மேற்கே நிலை கொண்டு இருந்தது. பின்னர் அந்த புயல் வட- வடமேற்கு திசையில் நேற்று பகலில் நகர்ந்தது. நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகர்ந்த அந்த புயல் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்றது.

இதன் நிகழ்வின் காரணமாக தமிழ்நாட்டில் நேற்று, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. அதே நேரத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 4 டிகிரி செல்சியஸ் வரை கணிசமாக வெப்பம் நேற்று உயர்ந்து காணப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்பட்டது. கடலூர், தர்மபுரி, ஈரோடு, மதுரை, திருநெல்வேலி, சேலம், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறைவாக காணப்பட்டது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு வலுப்பெற்று மோக்கா புயல் இன்று காலை முதல் வடக்கு-வட கிழக்கு திசையில் திரும்பி நகர்ந்து இன்று மாலையில் மேலும் மிகத் தீவிரம் அடையும். மேலும், மத்திய வங்கக் கடல் பகுதிகளில் அது நிலை கொள்ள வாய்ப்புள்ளது. அதன் பிறகு நாளை மாலை(13ம் தேதி) காற்றின் வேகம் படிப்படியாக மணிக்கு 140 கிமீ முதல் 150 கிமீ வேகத்திலும், இடையிடையே 165 கிமீ வேகம் வரை உயர்ந்து 14ம் தேதி காலை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கடற்கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து மேற்கண்ட பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மியான்மர் நோக்கி நகர்கிறது; மிக தீவிர புயலாக மாறியது ‘மோக்கா’: மேலும் வலுப்பெற்று 14ம் தேதி கரையை கடக்கும் appeared first on Dinakaran.

Tags : Myanmar ,Mokha ,Chennai ,Cyclone Mocha ,Bay of Bengal ,Dinakaran ,
× RELATED ஸ்டார் ஃப்ரூட்டின் நன்மைகள்!