×

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி முதல் சுற்றில் இன்டர் மிலன் வெற்றி

மிலன்: ஐரோப்பிய முன்னணி கால்பந்து கிளப்களுக்கு இடையே நடைபெறும் யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக்கின் கால்பந்து போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 2 சுற்றுகளாக நடைபெறும் அரையிறுதியின் முதல் சுற்று ஆட்டங்கள் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் சுற்று முதல் அரையிறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்(ஸ்பெயின்)-மான்செஸ்டர் சிட்டி(இங்கிலாந்து) அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. தொடர்ந்து நேற்று நடந்த 2வது அரையிறுதியின் முதல் சுற்றில் இத்தாலியை சேர்ந்த இன்டர் மிலன்-ஏ.சி.மிலன் அணிகள் மோதின. இரண்டும் உள்ளூர் அணிகள் என்பதால் ரசிகர்களின் ஆதரவும், ஆரவாரமும் சமநிலையில் இருந்தன.

அதே நேரத்தில் இன்டர் மிலன் ஆரம்பத்திலேயே அதிரடியாக ஆடி அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தியது. ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் முன்கள வீரர் எடின் ஜெகோவும், 11வது நிமிடத்தில் நடுகள வீரர் ஹென்ரிக்கும் கோல் அடித்த அணிக்கு முன்னிலைப் பெற்று தர முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து 2வது பாதியில் ஏ.சி.மிலன் அணி வீரர்கள், துல்லியமாக பந்தை கடத்தி ஆட்டத்தை தங்கள் வசம் வைத்திருந்தும் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. அதனால் ஆட்டத்தின் முடிவில் இன்டர் மிலன் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்த 2 அணிகளும் மோதும் 2வது சுற்று அரையிறுதி ஆட்டம் மே 17ம் தேதி இதே மிலன் நகரில் நடைபெறும். மான்செஸ்டர் சிட்டி-ரியல் மாட்ரிட் அணிகள் மோதும் 2வது சுற்று அரையிறுதி ஆட்டம் மே 18ம் தேதி நடக்கும்.

The post சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி முதல் சுற்றில் இன்டர் மிலன் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Inter Milan ,Champions League ,-final ,Milan ,UEFA Champions League ,Dinakaran ,
× RELATED சில்லிபாயின்ட்..