×

கேகேஆர் அணியுடனான லீக் போட்டி ராஜஸ்தான் அணிக்கு 150 ரன் இலக்கு

கொல்கத்தா: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், கேகேஆர் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடரின் 56வது லீக் போட்டி நேற்றிரவு நடந்தது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், கேகேஆர்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், பந்துவீச்சை தேர்வு செய்தார். கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன்ராய், குர்பாஷ் ஆகியோர் களம் இறங்கினர்.

போல்ட் வீசிய ஆட்டத்தின் 3வது ஓவரின் 2வது பந்தில், ஹெட்மயரின் அபார கேட்சால், ஜேசன்ராய் 10 ரன்னில் அவுட் ஆனார். மறுபுறம் சந்தீப் வீசிய ஆட்டத்தின் 4வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் அடித்து குர்பாஸ் அசத்தினார். ஆனால் அடுத்த ஓவரிலேயே போல்ட்டின் பந்துவீச்சில், சந்தீப்பின் சிறப்பான கேட்சில், 18 ரன்னில் (12 பந்துகள்) குர்பாஸ் அவுட் ஆனார். இதனை ெதாடர்ந்து வெங்கடேஷ் ஐயருடன், கேப்டன் ராணா ஜோடி சேர்ந்தார். இந்த இணை நிதானமாக ஆடி, 36 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த நிலையில், 10.2 ஓவரில், சஹால் பந்துவீச்சில் 22 ரன்களில் கேப்டன் ராணா ஆட்டமிழந்தார்.

அதன்பின் வந்த ரஸல் 10 ரன்னில், ஆசிப் பந்தில் அவுட்டானார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய வெங்கடேஷ் ஐயர், 39 பந்துகளில் நடப்பு ஐபிஎல் சீசனில் தனது 2வது அரைசதத்தை அடித்தார். சிறப்பாக விளையாடிய அவர், 16.1 ஓவரில், 57 ரன்னில் (42 பந்துகள்) சஹால் பந்தில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அதே ஓவரின் 4வது பந்தில், ஷர்துல் தாகூர் ஒரு ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து, சஹாலின் அடுத்த ஓவரில் (18.4) 18 பந்தில் 16 ரன் எடுத்திருந்த ரிங்கு சிங், ரூட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஆட்டத்தின் இறுதி பந்தில் சுனில் நரைன் 6 ரன்னில், சந்தீப் பந்தில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் கேகேஆர் அணி 20 ஓவர் முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் அபாரமாக பந்து வீசிய சஹால், 4 ஓவரில் 25 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும், போல்ட் 2, சந்தீப், ஆசிப் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், ராஜஸ்தான் அணி களம் இறங்கியது.

The post கேகேஆர் அணியுடனான லீக் போட்டி ராஜஸ்தான் அணிக்கு 150 ரன் இலக்கு appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,KKR ,Kolkata ,IPL league ,Rajasthan Royals ,Dinakaran ,
× RELATED குஜராத், ராஜஸ்தானில் ரூ300 கோடி...